நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை தென்னந்தோப்புகளில் மழைநீர் தேங்கியது


நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை தென்னந்தோப்புகளில் மழைநீர் தேங்கியது
x
தினத்தந்தி 16 Feb 2019 10:00 PM GMT (Updated: 16 Feb 2019 7:52 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் தென்னந்தோப்புகளில் மழைநீர் தேங்கியது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் தென்னந்தோப்புகளில் மழைநீர் தேங்கியது.

பலத்த மழை

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்லமுடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் இருந்தது. இந்த நிலையில் தென்காசி, கடையநல்லூர், ஆய்குடி, துரைச்சாமிபுரம், சொக்கம்பட்டி, புளியங்குடி, சிவகிரி, வடகரை, மேக்கரை உள்ளிட்ட பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் மழை பெய்தது. இரவு 10 மணிக்கு மேல் பலத்த மழையாக பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்பு, கால்வாய், குட்டைகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. வறண்டு கிடந்த பகுதிகளில் எல்லாம் தண்ணீர் தேங்கியது. வெப்பம் தணிந்து இதமான சூழல் ஏற்பட்டது.

நெற்பயிர்கள் சேதம்

கடையநல்லூர், விந்தன்கோட்டை, ஆய்குடி, கிளாங்காடு, சுந்தரபாண்டியபுரம், மேலப்பாவூர் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீர் சாய்ந்து சேதம் அடைந்தன. வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றதாலும், நெற்பயிர்கள் சாய்ந்து கிடந்ததாலும் நெல் அறுவடை பாதிக்கப்பட்டன. மேலும் அறுவடை எந்திரங்கள் அதிக அளவில் இல்லாமல் விவசாயிகள் நெற்பயிர்களை அறுவடை செய்யமுடியாமலும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

மலைப்பகுதியில்

இதேபோல் நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான பாபநாசம், அடவிநயினார் அணைப்பகுதி, கருப்பாநதி அணை மற்றும் சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை, புளியரை, பண்பொழி உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முன்தினம் மழை பெய்து உள்ளது. அடவிநயினார் அணைப்பகுதியில் அதிக பட்சமாக 85 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

அடவிநயினார்-85, சிவகிரி-35, ஆய்குடி-34, கருப்பாநதி-28, சங்கரன்கோவில்-18, தென்காசி-4, செங்கோட்டை-3, பாபநாசம்-2, சேர்வலாறு-1, குண்டாறு-1.

Next Story