சென்னிமலை அருகே பரிதாபம் லாரி மோதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாவு கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றபோது விபத்து


சென்னிமலை அருகே பரிதாபம் லாரி மோதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாவு கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றபோது விபத்து
x
தினத்தந்தி 16 Feb 2019 10:45 PM GMT (Updated: 16 Feb 2019 7:54 PM GMT)

சென்னிமலை அருகே லாரி மோதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது.

சென்னிமலை,

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலா பகுதியை சேர்ந்தவர் ஹாஜி பகவதி பரம்பல். இவருடைய மகன் ஆனந்த் ஷாஜி (வயது 22). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் 4–ம் ஆண்டு படித்து வந்தார்.

இதற்காக இவர் பெருந்துறை பகுதியில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அதில் தங்கி இருந்து தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார். இவருடைய கல்லூரி நண்பர்களான கொடைக்கானலை சேர்ந்த நிக்சன் (21), சமீர்கான் (21) ஆகியோர் வீட்டுக்கு சென்றுவிட்டு அங்குள்ள இடங்களை சுற்றிப்பார்க்க ஆனந்த் ஷாஜி விரும்பினார்.

இதைத்தொடர்ந்து ஆனந்த் ஷாஜி, இவருடைய நண்பரான திண்டுக்கல்லை சேர்ந்த சரத் (21) மற்றும் நிக்சன், சமீர்கான் உள்பட 8 பேர் 4 மோட்டார்சைக்கிளில் பெருந்துறையில் இருந்து நேற்று அதிகாலை புறப்பட்டனர். இவர்கள் அனைவரும் சென்னிமலை வழியாக சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை ஆனந்த் ஷாஜி ஓட்டினார். அவருக்கு பின்னால் சரத் உட்கார்ந்திருந்தார்.

சென்னிமலை தெற்கு ராஜ வீதியில் இருந்து காங்கேயம் ரோடு வளைவில் திரும்பியபோது அந்த வழியாக சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் பழனி நோக்கி சிமெண்டு பாரம் ஏற்றி வந்த லாரி, ஆனந்த் ஷாஜியின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஆனந்த் ஷாஜி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். சரத் லேசான காயம் அடைந்தார். உடனே அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆனந்த் ஷாஜி பரிதாபமாக இறந்தார். பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சரத் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான வாழப்பாடி அருகே உள்ள சிந்தியாபுரத்தை சேர்ந்த சரவணன் (33) என்பவரை கைது செய்தனர்.


Next Story