தமிழக அரசிடம் நிதி இல்லை அத்திக்கடவு– அவினாசி திட்டத்தை எப்படி நிறைவேற்ற முடியும்? டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கேள்வி
தமிழக அரசிடம் நிதி இல்லாதபோது அத்திக்கடவு– அவினாசி திட்டத்தை எப்படி நிறைவேற்ற முடியும் என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பியுள்ளார்.
பெருந்துறை,
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. ஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தை நடத்தி வருகிறார். அதன்படி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் அவர் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்கள் மத்தியில் பேசி வருகிறார்.
இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு பெருந்துறைக்கு வந்தார். அவருக்கு கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து பெருந்துறை பஸ் நிலையம் அருகே திறந்த வேனில் நின்றபடி அவர் பேசினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:–
எனக்காக இரவு வெகுநேரமாகியும் நீங்கள் இங்கு காத்திருக்கிறீர்கள் என்றால், இந்த ஆட்சி எப்போது முடியும்? என்று நீங்கள் எண்ண தொடங்கி விட்டீர்கள் என்று புரிந்து கொள்ளமுடிகிறது. விரைவில் இந்த ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது. அதன்பின் யார் முதல்–அமைச்சர் என்பது பிரச்சினை இல்லை.
தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டு இன்றளவும் முழுமையடையாமல் அரைகுறையாக நிற்கின்றன. அரசிடம் நிதியே இல்லாதபோது அத்திக்கடவு– அவினாசி திட்டத்தை எப்படி நிறைவேற்ற முடியும்?. கொங்கு நாட்டு மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. எம்.ஜி.ஆர்., அவருக்கு பின் ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் நடத்துகிற ஆட்சி துரோக ஆட்சியாகத்தான் இருக்க முடியும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.