அரியலூர் ராணுவ வீரர் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம் குடும்பத்தினருக்கு நிர்மலா சீதாராமன் நேரில் ஆறுதல்


அரியலூர் ராணுவ வீரர் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம் குடும்பத்தினருக்கு நிர்மலா சீதாராமன் நேரில் ஆறுதல்
x
தினத்தந்தி 16 Feb 2019 11:30 PM GMT (Updated: 16 Feb 2019 8:06 PM GMT)

அரியலூர் ராணுவ வீரர் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. குடும்பத்தினருக்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நேரில் ஆறுதல் கூறினார்.

ஜெயங்கொண்டம்,

காஷ்மீரில் பலியான ராணுவ வீரர் சிவசந்திரன் உடல் திருச்சி விமானநிலையத்தில் இருந்து ராணுவ வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. வாகனத்தின் முன்பும், பின்பும் பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்களின் வாகனங்கள் வரிசையாக வந்தன. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா தா.பழூர் அருகே கார்குடி கிராமம் காலனி தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு மாலை 4 மணி அளவில் உடல் கொண்டு வரப்பட்டது. ராணுவ மரியாதையுடன் சிவசந்திரன் உடல் இருந்த சவப்பெட்டியை இறக்கி அவரது வீட்டு முன்பு வைத்தனர்.

அப்போது அவரது உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அங்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அப்போது மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், சிவசந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் சிவசந்திரன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதேபோல மத்திய இணை மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., கோவை மத்திய ராணுவ படை டி.ஐ.ஜி. சோனல் மிஸ்ரா, திருச்சி மத்திய மண்டல டி.ஐ.ஜி. லலிதா, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், த.மா.கா. மாநில தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம், ‘சிவசந்திரன் நினைவாக கார்குடி கிராமத்தில் அவரது பெயரில் நூலகம் ஒன்று அமைக்க வேண்டும்’ என்று அப்பகுதி மக்கள் கூறினர்.

நிகழ்ச்சியில், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த ரூ.20 லட்சத்திற்கான காசோலையை சிவசந்திரன் குடும்பத்தினரிடம் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் வழங்கினர்.

பொதுமக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்திய பின் மாலை 4.45 மணி அளவில் சிவசந்திரனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அவரது உடலை நல்லடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டது. அப்போது சிவசந்திரனின் உடல் மீது போர்த்தப்பட்டு இருந்த தேசிய கொடியை ராணுவ படை டி.ஐ.ஜி. சோனல் மிஸ்ரா எடுத்து சிவசந்திரனின் மனைவி காந்திமதியிடம் வழங்கினார்.

தொடர்ந்து 8 ராணுவ வீரர்கள் 21 குண்டுகள் முழங்க, சிவசந்திரனின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இளைஞர்கள் சிலர் வீர வணக்க முழக்கம் எழுப்பினர்.

சிவசந்திரன் பலியான சம்பவத்தால் அந்த கிராமமே சோக மயத்தில் மூழ்கியது.


Next Story