சிவன்மலை கோவில் படிக்கட்டில் ஏறியபோது மயங்கி விழுந்து கல்லூரி மாணவர் சாவு


சிவன்மலை கோவில் படிக்கட்டில் ஏறியபோது மயங்கி விழுந்து கல்லூரி மாணவர் சாவு
x
தினத்தந்தி 17 Feb 2019 3:45 AM IST (Updated: 17 Feb 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

சிவன்மலை கோவில் படிக்கட்டில் ஏறியபோது மயங்கி விழுந்து கல்லூரி மாணவர் இறந்தார்.

காங்கேயம்,

திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள மாஸ்கோ நகரை சேர்ந்தவர் ரவி. அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் விஜய் (வயது 21). இவர் அவினாசிபாளையம் ஏ.ஜி.கல்லூரியில் பி.எஸ்.சி. 3–வது ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் கல்லூரிக்கு நேற்று விடுமுறை என்பதால், விஜய் தனது நண்பர் அசோக்ராஜ் என்பவருடன் காங்கேயத்தை அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சாமி தரிசனம் பஸ்சில் சென்றார். பின்னர் சிவன்மலை அடிவாரத்தில் இறங்கிய அவர்கள், அங்கிருந்து படிக்கட்டு வழியாக மலை மீது உள்ள சுப்பிரமணியசாமி கோவிலுக்கு நடந்து சென்றனர். காலை 11 மணிக்கு பாதி தூரம் சென்றதும், திடீரென்று விஜய் மயங்கி விழுந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அசோக்ராஜ் உடனடியாக 108 ஆம்புலன்சு வாகனத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே அருகில் உள்ளவர்கள் உதவியுடன், விஜயை காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், விஜய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

விஜய் ஏற்கனவே ஆஸ்துமா நோயினால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மலையின் படிக்கட்டுகளில் ஏறும்போது விஜய் மயங்கி விழுந்து இறந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story