பலியான தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் எலாஸ்டிக் சங்க கூட்டத்தில் தீர்மானம்


பலியான தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் எலாஸ்டிக் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 17 Feb 2019 4:15 AM IST (Updated: 17 Feb 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான தமிழகத்தை சேர்ந்த 2 ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முடிவு செய்து, எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க அவசர கூட்டம் நேற்று மாலை திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே 60 அடி ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கி பேசினார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40–க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலியாகினர்.

இந்த நிலையில் பலியான ராணுவ வீரர்களின் புகைப்படம் வைத்து சங்க அலுவலகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. மலர்தூவியும் மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் சங்க செயலாளர் சவுந்தரராஜன், பொருளாளர் சந்திரமோகன் உள்பட சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பலியான ராணுவ வீரர்களில் தமிழகத்தை சேர்ந்த தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சவலாப்பேரி மேல தெருவை சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த சிவசந்திரன் ஆகியோரது குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் விரைவில் வழங்குவது.

மேலும், நாளை (திங்கட்கிழமை) திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 500–க்கும் மேற்பட்ட எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் நிறுவனங்களில் மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை உற்பத்தியை நிறுத்துவது. அப்போது மறைந்த ராணுவ வீரர்களுக்கு அந்தந்த நிறுவனங்களில் அஞ்சலி செலுத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story