தேர்வில் தோல்வி அடைந்ததால் மனவேதனை: திருச்சியில் ரெயில் முன் பாய்ந்து என்ஜினீயரிங் மாணவி தற்கொலை


தேர்வில் தோல்வி அடைந்ததால் மனவேதனை: திருச்சியில் ரெயில் முன் பாய்ந்து என்ஜினீயரிங் மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 16 Feb 2019 10:15 PM GMT (Updated: 16 Feb 2019 8:54 PM GMT)

தேர்வில் தோல்வி அடைந்ததால் திருச்சியில் ரெயில் முன் பாய்ந்து ராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

திருச்சி,

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அரசாத்தூர் பகுதியை சேர்ந்த சார்லசின் மகள் சவுந்தர்யா(வயது 18). இவர் திருச்சியில் புதுக்கோட்டை சாலையில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வந்தார். விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். சவுந்தர்யாவுடன் அவரது சகோதரியும் உடன் படித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் சவுந்தர்யா 4 பாடங்களில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை கல்லூரியின் அருகே குமாரமங்கலம் பகுதியில் தண்டவாளத்தில் ரெயில் முன் பாய்ந்து சவுந்தர்யா தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி ஜங்ஷன் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சவுந்தர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பருவ தேர்வில் 4 பாடங்களில் தோல்வி அடைந்ததால் மாணவி சவுந்தர்யா தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story