பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி


பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி
x
தினத்தந்தி 16 Feb 2019 11:00 PM GMT (Updated: 16 Feb 2019 9:20 PM GMT)

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாகுதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருவண்ணாமலை,

காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் கார் குண்டு தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்து கொண்டு மோட்ச தீபம் ஏற்றினார். முன்னதாக அங்கு 40 துணை ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டு, அதன் முன்பு பல்வேறு வண்ண மலர்களால் இந்திய வரைப்படம் வரையப்பட்டு இருந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், நகராட்சி ஆணையர் பாரிஜாதம் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்கள் மூலம் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. நிகழ்ச்சிக்கு ரமேஷ் குருக்கள் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க. நகர செயலாளர் செல்வம், சிவாச்சாரியார்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் பிராமண சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் 16 கால் மண்டபம் முன்பு பா.ஜ.க. முன்னாள் ராணுவ பிரிவு சார்பில் முன்னாள் ராணுவ பிரிவு தலைவர் கே.சத்தியமூர்த்தி தலைமையில் மாவட்ட தலைவர் எஸ்.நேரு உள்பட பா.ஜ.க.வினர் மவுன அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து தீவிரவாதியின் கொடுஞ்செயலை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷமிட்டனர். இதில் மாவட்ட துணைத் தலைவர் இறைமாணிக்கம், நகர தலைவர் பி.செந்தில்முருகன், நகர பொதுச் செயலாளர்கள் அரிசிவெங்கடேசன், கே.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் திருவண்ணாமலை மாவட்ட இளைஞரணி சார்பில் திருவண்ணாமலை தண்டராம்பட்டு ரோடு அண்ணாநகரில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இளைஞரணி மாவட்ட தலைவர் நேரு தலைமையில் பிரகாஷ், சுதாகர், ரஜினி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் வீரவணக்க கோஷங்கள் எழுப்பினர்.

அதேபோல் வாணாபுரம் அருகில் உள்ள சதாகுப்பத்தில் ராணுவவீரர்கள் மற்றும் மாணவர்கள் பதாகைகளை ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ஆரணி நகர இந்து முன்னணி சார்பில் ஆரணி அண்ணா சிலை அருகே நகரத்தலைவர் தாமோதரன் தலைமையில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். மேலும் பாகிஸ்தான் நாட்டின் கொடியையும் எரித்தனர். இதில் நகர பா.ஜ.க. தலைவர் தரணி, மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் கோபால், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், இந்து முன்னணி நகர செயலாளர் நாகராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சிறு, குறு, பெரு வியாபாரிகள் நலச்சங்க தலைவர் அருண்குமார் தலைமையில் டவுன் போலீஸ் நிலையம் அருகில் இருந்து மவுன ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அண்ணா சிலை அருகே மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதில் நிர்வாகிகள், வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆரணி ஏ.சி.எஸ். மெட்ரிக் பள்ளியில், பள்ளி செயலாளர் ஏ.சி.பாபு, முதல்வர் செலின்திலகவதி ஆகியோர் முன்னிலையில் பள்ளி மாணவ-மாணவிகள் மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியும் எடுத்து கொண்டனர்.

வேட்டவலத்தில் ரதம் சேவா சங்கம் சார்பில் தலைவர் ரோகிந்த், தீபம் சேவா சங்க செயலாளர் கார்த்திகேயன், ரதம் சேவா சங்க செயலாளர் ஹரிஹரசுதன், பொருளாளர் பிரபு, துணைத்தலைவர் மூர்த்தி, துணை செயலாளர்கள் ராமு, வீரப்பன், சந்துரு, துளசி ஆகியோர் கடைவீதியில் உள்ள போலீஸ் நிலையம் எதிரில் காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மெழுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினர்.

மேலும் பல்வேறு அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் சார்பில் காந்திசிலை அருகில் வீரமரணம் அடைந்த ராணுவவீரர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக மாடவீதியில் வலம் வந்து காந்திசிலையை அடைந்தவுடன் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல் ராணுவ வீரர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி போளூர் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினர்.

Next Story