தேர்தல் தொடர்பான பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும் தலைமை தேர்தல் அலுவலர் உத்தரவு


தேர்தல் தொடர்பான பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும் தலைமை தேர்தல் அலுவலர் உத்தரவு
x
தினத்தந்தி 17 Feb 2019 4:30 AM IST (Updated: 17 Feb 2019 3:15 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு கூறினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதாசாகு நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டு, தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு முகாமை பார்வையிட்டு, வாக்காளர்களிடம் மாதிரி மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். மேலும் மாதிரி வாக்குப்பதிவு முகாமில் வாக்காளர்கள் பதிவேட்டினையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து வருகிற நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள வாக்காளர் சேவை ‘1950’ எண்ணிற்கான கட்டுப்பாட்டு மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது இந்த சேவை மையத்தில் தினசரி வாக்காளர்களிடம் இருந்து வரப்பெறும் புகார்கள், கருத்துகள், தகவல்கள் ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தலைமை தேர்தல் அலுவலர் தலைமையில் கலெக்டர் கந்தசாமி, போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி மற்றும் அரசு அலுவலர்களுடன் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது தேர்தல் தொடர்பான பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும். அனைத்து பணிகளையும் விரைவில் முடிக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வை அனைத்து வாக்காளரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். வாக்காளர் சேவை மையத்தில் வரப்பெறும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு முடிக்க வேண்டும், என்று தலைமை தேர்தல் அலுவலர் அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து அவர் கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள வைப்பறையை நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஜெயசுதா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். 

Next Story