தமிழகத்தில் 8, 9, 10-ம் வகுப்புகளில் படிக்கும் 13 லட்சம் மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் மடிக்கணினி’ அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
தமிழகத்தில் 8, 9, 10-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் 13 லட்சம் பேருக்கு தமிழக அரசு சார்பில் ‘ஸ்மார்ட் மடிக்கணினி’ வழங்கப்படும் என்று தேனி நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தேனி,
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட தேனி நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா கடந்த 14-ந்தேதி தொடங்கியது. விழாவில் நேற்று, மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். அவர், உறவின்முறை அலுவலகம், தொடக்கப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூற்றாண்டு விழா கட்டிடங்களுக்கான கல்வெட்டுகளை திறந்து வைத்தார்.
தொடர்ந்து தேனி மேலப்பேட்டையில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் தங்களின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மாலையில் உறவின்முறை மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், முதல்வர்கள் ஆகியோர்களை கவுரவிக்கும் விழா நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
விழாவுக்கு உறவின்முறை தலைவர் முருகன் தலைமை தாங்கினார். துணை தலைவர் பாலகிருஷ்ணன், பொதுச்செயலாளர் ராஜமோகன், பொருளாளர் ஜவஹர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைமை ஆசிரியர் ஆர்தர்ஹோப் வரவேற்று பேசினார். தேனி எம்.பி. பார்த்திபன், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினர். விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கல்வியோடு ஒழுக்கத்தையும் கற்பிக்கும் நாடார் சரசுவதி கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கல்விக்கண் திறந்தவர் காமராஜர். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலம் கல்விக்கு பொற்காலம். நாடே வியக்கும் அளவுக்கு கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, ஏராளமான நலத்திட்டங்களை வழங்கியவர் ஜெயலலிதா. இந்த ஆண்டு கல்விக்கு மட்டும் ரூ.28 ஆயிரத்து 750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
அடுத்த கல்வி ஆண்டு முதல் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு மாணவ, மாணவிகளுக்கு 4 சீருடைகள் வழங்கப்படும். இந்தியாவே வியக்கும் அளவுக்கு புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும். தமிழகத்தில் 1 லட்சத்து 80 ஆயிரம் என்ஜினீயர்கள் படித்து விட்டு வேலை இல்லாமல் உள்ளனர். இந்த நிலையை மாற்ற, பிளஸ்-2 பாடத்துடன் 10 திறன் வளர்ப்பு பாடங்கள் சேர்க்கப்படும். பிளஸ்-2 படித்து முடித்தாலே வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையை உருவாக்குவோம்.
மத்திய அரசு உதவியுடன் 8, 9, 10-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் 13 லட்சம் பேருக்கு ‘ஸ்மார்ட் மடிக்கணினி’ வழங்கப்படும். மேலும் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை உள்ள ஆசிரியர்கள் 80 ஆயிரம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளது. 6 முதல் 8-ம் வகுப்பு வரை 3 ஆயிரம் பள்ளி வகுப்பறைகள் மார்ச் மாதத்துக்குள் ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகளாக மாற்றப்படும். 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை உள்ள வகுப்பறைகள் இணையதள மயமாக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் நிர்வாகிகள், பள்ளி, கல்லூரி முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு நினைவுப் பரிசு வழங்கி அவர் பாராட்டினார். விழாவில் உறவின்முறை நிர்வாகிகள், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story