தொண்டி பகுதியில் கடலில் வெடிகுண்டு வீசி மீன்பிடிப்பில் ஈடுபட்டவர் கைது 46 டெட்டனேட்டர்கள்–ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்
தொண்டி பகுதியில் சட்டவிரோதமாக கடலில் வெடிகுண்டுகளை வீசி மீன்பிடிப்பில் ஈடுபட்டவரை கடலோர போலீசார் கைதுசெய்தனர். அவரிடம் இருந்து 46 டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி புதுக்குடி கடற்கரை பகுதியில் சில மீனவர்கள் சட்டவிரோதமாக கடலில் வெடிகுண்டுகளை வீசி மீன்பிடிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
அதனை தொடர்ந்து தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் ஏடி.ஜி.பி. வன்னியபெருமாள் உத்தரவின்பேரில் கடலோர பாதுகாப்பு குழு சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் கார்த்தி, நுண்ணறிவு பிரிவு ஏட்டுகள் இளையராஜா, குமார், கணேஷ் ஆகியோர் நேற்று அதிகாலை கடலோர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது தொண்டி புதுக்குடி பகுதியில் வெடிகுண்டு வீசி மீன்பிடிப்பில் ஈடுபட்ட கார்மேகம் (வயது58) என்பவரை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து திரியுடன் கூடிய 46 டெட்டனேட்டர்கள், 42 ஜெலட்டின் குச்சிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அப்போது போலீசாரை கண்டதும் முக்கிய குற்றவாளியான செந்தில்(33) மற்றும் 4 பேர் தப்பிஓவிட்டனர். அவர்களை கடலோர போலீசார் தேடிவருகின்றனர்.