விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் எலும்பு, கண்நோய் சிகிச்சை பிரிவிற்கு டாக்டர்கள் நியமிக்க கோரிக்கை


விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் எலும்பு, கண்நோய் சிகிச்சை பிரிவிற்கு டாக்டர்கள் நியமிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 16 Feb 2019 10:30 PM GMT (Updated: 16 Feb 2019 10:24 PM GMT)

விருதுநகரில் உள்ள மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் எலும்பு மற்றும் கண்நோய் சிகிச்சை பிரிவில் டாக்டர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகரில் உள்ள மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளி சிகிச்சை பிரிவில் 450 படுக்கைகள் உள்ளன. பிரசவ வார்டு தனியாக செயல்பட்டு வருகிறது. வெளிநோயாளி சிகிச்சை பிரிவில் தினசரி 800–க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஏழை–எளிய மக்களுக்கு உயர்தர நவீன சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு இந்த அரசு ஆஸ்பத்திரிக்கு டிஜிட்டல் எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற அதிநவீன மருத்துவ கருவிகளை வழங்கியுள்ளது. மத்திய அரசின் லக்‌ஷயா திட்டத்தின் கீழ் இந்த அரசு ஆஸ்பத்திரிக்கு 3 ஆண்டுகளுக்கு ரூ.15 கோடி உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டிற்காக நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இந்த அரசு ஆஸ்பத்திரியில் எலும்பு, கண் மற்றும் தலைக்காய சிகிச்சை பிரிவிற்கு டாக்டர்கள் நியமனம் இல்லாத நிலை நீடிக்கிறது. அதிலும் விருதுநகரில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் உள்ள நிலையில் வாகன விபத்துகளில் சிக்கி எலும்பு முறிவு சிகிச்சைக்காக இந்த ஆஸ்பத்திரிக்கு வருபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியாமல் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்காக எலும்பு முறிவு சிகிச்சைக்கு வருவோர் இங்கிருந்து சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கும் நிலை ஏற்படுகிறது. இதேபோன்று தலைக்காய சிகிச்சைக்கு மதுரைக்கு அனுப்பிவைக்கப்படும் நிலை உள்ளது. கண்நோய் பாதிப்படைந்தவர்களுக்கு வாரம் ஒருமுறை அருப்புக்கோட்டையில் இருந்து வரும் டாக்டர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர். இதனால் நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே தமிழக அரசு மாவட்ட தலைமை அந்தஸ்து பெற்றுள்ள இந்த ஆஸ்பத்திரியில் எலும்பு, கண் மற்றும் தலைக்காய சிகிச்சை பிரிவிற்கு சிறப்பு டாக்டர்களை நியமிப்பதுடன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரம் முழுமையான பயன்பாட்டிற்கு வருவதற்கு தேவையான பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story