வீரமரணம் அடைந்த துணை ராணுவவீரர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலால் வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
விருதுநகர்,
தேசிய விநாயகம் பிள்ளைக்கு குமரி மாவட்டத்திலும், பெரும்பிடுகு முத்தரையருக்கு திருச்சி மாவட்டத்திலும், இரட்டைமலை சீனிவாசனுக்கு மதுராந்தகத்திலும், பழனிச்சாமி கவுண்டருக்கு கோவை மாவட்டத்திலும், ஏ.சி. பன்னீர்செல்வத்திற்கு திருச்சி மாவட்டத்திலும் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்–அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் நல்லான் இளையநாயகருக்கு நாமக்கல் மாவட்டத்தில் திருவுருவ சிலையும் ஒண்டிவீரன் மற்றும் வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபங்கள் ரூ.75 லட்சம் செலவில் புனரமைக்கவும் முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் திருத்தணியை தமிழகத்தோடு இணைக்க பாடுபட்ட ம.போ.சி. முல்லை பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னிகுயிக், காளிங்கராயன், அழகுமுத்துக்கோன் ஆகியோரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. மேலும் பத்திரிகை துறை ஜாம்பவானும் பாமரரும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த மாற்றம் கொண்டுவந்தவரும் தமிழர் தந்தை என போற்றப்படுபவரும் அமைச்சராகவும் சட்டப்பேரவை தலைவராகவும் இருந்து தமிழகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் தொண்டாற்றியவருமான சி.பா. ஆதித்தனாரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல் அமைச்சர் அறிவித்துள்ளார். செய்தித்துறை வரலாற்றில் ஒரே நாளில் 5 தலைவர்களுக்கு மணிமண்டபங்கள் கட்டுவதற்கும் 5 தலைவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவதற்கும் அறிவிப்பை முதல் அமைச்சர் வெளியிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலால் 40 துணை ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரதமர் மோடி இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அறிவித்துள்ளார். இதில் எனது தொகுதியை சேர்ந்த செவலாபேரி சுப்பிரமணியன் என்ற வீரரும் வீர மரணம் அடைந்துள்ளார்.
வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்த மத்திய மந்திரி பொன்ராதாகிருஷ்ணன், துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்களுடன் நானும் அஞ்சலி செலுத்தினோம். எனது தொகுதியை சேர்ந்த வீரர் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியானது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீரமரணம் அடைந்த துணைராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்ததோடு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்.
வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தவும் தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் முதல் அமைச்சரும் துணை முதல் அமைச்சரும் பல்வேறு குழுக்களை அமைத்துள்ளனர். கூட்டணி பற்றி முதல் அமைச்சரும் துணை முதல் அமைச்சரும் அறிவித்தபின்பு அவர்களது அறிவுறுத்தலின் படி நாங்கள் தேர்தல் பணியாற்றுவோம்.
இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.