நாடாளுமன்ற தேர்தல் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி உறுதி சரிசமமான தொகுதிகளில் போட்டி


நாடாளுமன்ற தேர்தல் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி உறுதி சரிசமமான தொகுதிகளில் போட்டி
x
தினத்தந்தி 17 Feb 2019 4:30 AM IST (Updated: 17 Feb 2019 4:00 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி உறுதியாகி உள்ளது.2 கட்சிகளும் சரிசமமான தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

மும்பை,

மராட்டியத்தில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி உறுதியாகி உள்ளது.2 கட்சிகளும் சரிசமமான தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

கூட்டணி பேச்சு

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மராட்டியத்தில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. அவர்கள் மேலும் பல சிறிய கட்சிகளை சேர்த்து தங்கள் கூட்டணியை மெகா கூட்டணியாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பா.ஜனதாவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வந்ததால் சிவசேனா அந்த கட்சியுடன் கூட்டணி அமைக்குமா என்ற சந்தேகமும் இருந்து வந்தது.

சரிசமமான தொகுதிகள்

இந்தநிலையில் அடுத்த சில நாட்களுக்குள் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் நாடாளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் சரிசமமான தொகுதிகளில் போட்டியிட ஒப்பு கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடந்த வியாழக்கிழமை மாதோஸ்ரீ இல்லத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார்.

ஆனால் அதற்கு முன்பே 2 கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தையை முடித்து உள்ளது. மேலும் அன்றைய தினம் முதல்-மந்திரியும், உத்தவ் தாக்கரேயும் ஒன்றாக கூட்டணி அறிவிப்பை வெளியிட இருந்ததாகவும், ஆனால் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் பலியானதால் கூட்டணி அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது.

நாளை அறிவிப்பு

வருகிற செவ்வாய்க்கிழமை சத்ரபதி சிவாஜி ஜெயந்தி நாள் ஆகும். எனவே நாளை (திங்கட்கிழமை) பா.ஜனதா, சிவசேனா கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

இதுகுறித்து பா.ஜனதாவை சேர்ந்த மந்திரி ஒருவர் கூறியதாவது:-

கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை 15 நாட்களாக நடந்தது. விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும். இந்துத்வா கொள்கை, விவசாயிகள் நலன், வளர்ச்சி திட்டங்கள் அடிப்படையிலும் ஓட்டுகள் சிதறுவதை தடுக்கவும் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-மந்திரி பதவி

முன்னதாக நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் கூட்டணியையும் இறுதி செய்ய வேண்டும், முதல்-மந்திரி பதவியை தங்களுக்கு விட்டு தர வேண்டும் என்றும் பா.ஜனதாவிடம் சிவசேனா நிபந்தனை விதித்து இருந்தது. இந்த நிபந்தனையை பா.ஜனதா ஏற்றுக்கொண்டதா என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த விவகாரத்தில் 2 கட்சிகளும் 2½ ஆண்டுகளுக்கு சுழற்சி முறையில் முதல்-மந்திரி பதவியை வகித்து கொள்ள ஒப்பு கொண்டு இருக்கலாம் என அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Next Story