ஆரல்வாய்மொழியில் பாகிஸ்தான் பிரதமர் உருவப்படம் தீ வைத்து எரிப்பு பயங்கரவாத தாக்குதலை கண்டித்து நடந்தது


ஆரல்வாய்மொழியில் பாகிஸ்தான் பிரதமர் உருவப்படம் தீ வைத்து எரிப்பு பயங்கரவாத தாக்குதலை கண்டித்து நடந்தது
x
தினத்தந்தி 17 Feb 2019 11:00 PM GMT (Updated: 17 Feb 2019 4:47 PM GMT)

ஆரல்வாய்மொழியில் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பாகிஸ்தான் பிரதமர் உருவப்படத்தை இந்து முன்னணியினர் தீ வைத்து எரித்தனர்.

ஆரல்வாய்மொழி,

காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

பயங்கரவாதிகள் தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதில் பெரும் பாலான இடங்களில் நடந்த போராட்டத்தின்போது பாகிஸ்தான் கொடி எரிக்கப்பட்டது.

இந்த நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 வீரர்களுக்கு தோவாளை ஒன்றிய இந்து முன்னணி சார்பில் ஆரல்வாய்மொழி சந்திப்பில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு ஒன்றிய தலைவர் முருகன் தலைமை தாங்கினார். வீரர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, வீர வணக்க கோ‌ஷம் எழுப்பப்பட்டது. இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் சங்கர், முருகன், பெருமாள், சந்திரகுமார், அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது திடீரென்று இந்து முன்னணியினர், பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உருவப்படத்தை தீவைத்து எரித்தனர். மேலும் அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராகவும், பயங்கரவாதிகளை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பினார்கள். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும், ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

Next Story