நுகர்பொருள் வாணிப கிடங்கில் ரேஷன் பொருட்கள் ஏற்ற வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது


நுகர்பொருள் வாணிப கிடங்கில் ரேஷன் பொருட்கள் ஏற்ற வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது
x
தினத்தந்தி 18 Feb 2019 4:00 AM IST (Updated: 17 Feb 2019 10:22 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ரேஷன் பொருட்கள் ஏற்ற வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது. இருப்பினும் கிடங்கில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள அரிசி மூட்டைகள் தப்பின.

பூந்தமல்லி,

திருவள்ளூர் புங்கத்தூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கு மற்றும் தமிழ்நாடு பாட நூல் நிறுவனத்தின் வட்டார அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கிடங்கில் இருந்து நாள் தோறும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் ரேஷன் கடைகளுக்கு உணவு பொருட்களை ஏற்றி செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு அங்கு லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது ஈக்காடு கண்டிகையை சேர்ந்த தாமு என்பவரது லாரியின் டீசல் டேங்கில் தீ ஏற்பட்டு லாரி தீப்பிடித்து நகர தொடங்கியது.

இந்த லாரி சுமார் 50 அடி தூரம் சென்று முன்னால் நின்று கொண்டிருந்த மற்றொரு லாரி மீது மோதி நின்றது. இந்த விபத்தில் அங்கு நின்று கொண்டிருந்த டிரைவர்கள் ஆனந்தன் (வயது55), பாபு ஆகியோர் தீக்காயம் அடைந்தனர். இது குறித்த தகவல் திருவள்ளூர் தீயணைப்புத்துறையினருக்கு கிடைத்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். நுகர்பொருள் வாணிப கிடங்கில் தீ பரவாமல் தடுக்கும் வகையில் அவர்கள் ஒரு மணிநேரம் போராடி லாரியில் பிடித்த தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் லாரி முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. காயம் அடைந்த டிரைவர்கள் இருவரும் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நுகர்பொருள் வாணிப கிடங்கில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான அரிசிமூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தீப்பற்றி எரிந்த லாரி முன்னால் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதி நின்றதால் அரிசி மூட்டைகள் தப்பின. அதேபோல் தமிழ்நாடு பாட நூல் நிறுவனத்தின் வட்டார அலுவலகத்தில் வைக்கப் பட்டிருந்த நோட்டு புத்தகங்களும் தப்பியது. லாரி தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story