பிளாஸ்டிக் பொருட்கள் பாதிப்பு குறித்து மோட்டார் சைக்கிளில் பெண் விழிப்புணர்வு பிரசாரம்


பிளாஸ்டிக் பொருட்கள் பாதிப்பு குறித்து மோட்டார் சைக்கிளில் பெண் விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 18 Feb 2019 3:30 AM IST (Updated: 18 Feb 2019 12:33 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பிளாஸ்டிக் பொருட்கள் பாதிப்பு குறித்து, ஒரு பெண் நின்றபடி மோட்டார் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் பிளாஸ்டிக் பொருட்கள் பாதிப்பு குறித்து, ஒரு பெண் நின்றபடி மோட்டார் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார்.

விழிப்புணர்வு பிரசாரம்

கோவை மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் சைபி மேத்யூ. தையல் தொழில் செய்து வருகிறார். இவர் பிளாஸ்டிக் ஒழிப்பு, விவசாயம், இயற்கை, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நின்றபடி மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மொத்தம் 33 மாவட்டங்களில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பிரசாரம் செய்ய உள்ளார்.

கடந்த 2-ந் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூரில் பிரசாரத்தை தொடங்கிய சைபி மேத்யூ, நெல்லை, கன்னியாகுமரி வழியாக நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். அங்கு தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.

துண்டு பிரசுரம்

தொடர்ந்து தூத்துக்குடியில் முக்கிய வீதிகளில் மோட்டார் சைக்கிளில் நின்றபடியே ஓட்டி சென்றார். அப்போது மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகித்தார். பள்ளிக்கூடம், கல்லூரிகளுக்கு சென்று மாணவ-மாணவிகளை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இன்று (திங்கட்கிழமை) தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்கிறார். அதன்பிறகு ராமநாதபுரத்துக்கு புறப்பட்டு செல்கிறார்.

Next Story