கால்வாய் சீரமைக்காததை கண்டித்து எண்ணூரில் பொதுமக்கள் போராட்டம்


கால்வாய் சீரமைக்காததை கண்டித்து எண்ணூரில் பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 18 Feb 2019 3:30 AM IST (Updated: 18 Feb 2019 12:36 AM IST)
t-max-icont-min-icon

எண்ணூரில் கால்வாய் மற்றும் பழுதான சாலையை சீரமைக்காத மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர்,

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட கத்திவாக்கத்தில் பஜனை கோவில் தெரு மற்றும் நேருநகர் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், பாதாள சாக்கடை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் பொதுமக்கள் சிலர் தங்கள் வீடுகளில் கழிவுநீரை தொட்டிகள் மூலம் தேக்கி, அதை லாரிகள் மூலம் அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும் சிலர் கழிவுநீரை தெருவில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி கால்வாயில் விடுகின்றனர்.

குண்டும், குழியுமான சாலை

அங்குள்ள திறந்தவெளி கால்வாயை திருவொற்றியூர் மண்டல சுகாதாரத்துறை மாநகராட்சி ஊழியர்கள் சரிவர பராமரிப்பதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கால்வாய் அமைத்து பல வருடங்கள் ஆவதால், பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத்தொல்லையும் அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர்.

மேலும், தெருக்களில் உள்ள சாலைகளும் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல், குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

கால்வாய் மற்றும் சாலைகளை சீரமைக்கக்கோரி திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள், நேருநகர் தெருவில் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த எண்ணூர் போலீசார், இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்து கலைந்து போக செய்தனர்.

Next Story