திருமருகல் ஒன்றியத்தில் உள்ள ஆறு, குளங்களை தூர்வார வேண்டும் தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தில் வலியுறுத்தல்


திருமருகல் ஒன்றியத்தில் உள்ள ஆறு, குளங்களை தூர்வார வேண்டும் தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Feb 2019 11:00 PM GMT (Updated: 17 Feb 2019 7:10 PM GMT)

திருமருகல் ஒன்றியத்தில் உள்ள ஆறு, குளங்களை தூர்வார வேண்டும் என தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருமருகல்,

திருமருகல் தெற்கு ஒன்றியம் திருச்செங்காட்டங்குடியில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தி.மு.க. விவசாய அணி செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஏ.கே.எஸ். விஜயன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் பூதங்குடி சரவணன், மாவட்ட துணை செயலாளர் பாபுஇளஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலியமூர்த்தி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண் உள்பட தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருமருகல் ஒன்றியத்தில் உள்ள ஆறுகள், குளங்கள், வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும், குடிநீர், சாலை, மின்சாரம், உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், திருச்செங்காட்டங்குடியில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். முதியோர் உதவித்தொகை தகுதியுள்ள அனைவருக்கும் காலதாமதமின்றி வழங்க வேண்டும். அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரும் நெல்லை பாதுகாக்க அனைத்து விவசாயிகளுக்கும் அரசு இலவசமாக தார் பாய்களை வழங்க வேண்டும்.

திருமருகலை தனி தாலுகாவாக உருவாக்க வேண்டும். திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மகப்பேறு மருத்துவரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுக்களை ஏ.கே.எஸ். விஜயனிடம் பொதுமக்கள் வழங்கினர். மனுக்களை பெற்று கொண்ட அவர் கோரிக்கைகள் அனைத்தும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினிடம் தெரிவித்து நிறைவேற்றி தரப்படும் என்று கூறினார்.

இதேபோல திருமருகல் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் உத்தமசோழபுரம், நரிமணம், கோபுராஜபுரம், குத்தாலம், கொட்டாரக்குடி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்றது. அந்தந்த தி.மு.க. ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர்.இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

Next Story