பள்ளிகொண்டாவில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு


பள்ளிகொண்டாவில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 18 Feb 2019 4:15 AM IST (Updated: 18 Feb 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிகொண்டாவில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அணைக்கட்டு, 

அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா போலீஸ் நிலைய எல்லைக்குள் ஏற்கனவே அகரம்சேரி, ராமாபுரம் மற்றும் கந்தனேரி பகுதியில் 2, இறைவன்காடு தனியார் கல்லூரி அருகே என 5 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த நிலையில் பள்ளிகொண்டா பஸ் நிறுத்தம் அருகே 6-வதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தூரம் வரையில் டாஸ்மாக் கடைகள் இருக்கக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டது, அதன்பேரில் சாலையோரத்தில் இருந்த டாஸ்மாக் கடைகளை அகற்றினர்.

இந்த நிலையில் பள்ளிகொண்டா பஸ் நிறுத்தத்தில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தினமும் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள், பொதுமக்கள் என 3 ஆயிரம் பேர் வந்து செல்லும் இடத்தில் டாஸ்மாக் கடை திறந்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். அதே நேரத்தில் பள்ளிகொண்டாவில் இருந்து குடியாத்தம் செல்லும் ரோடு குறுகிய சாலையாக இருப்பதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. மேலும் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும். தற்போது டாஸ்மாக் கடை திறந்தால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

தற்போது உள்ள 5 டாஸ்மாக் கடைகளுக்கு இரவு நேரத்தில் பாதுகாப்பு பணிக்கு செல்ல போதிய போலீசார் இல்லாததால் அகரம்சேரியில் உள்ள டாஸ்மாக் கடை சுவரில் துளைபோட்டு கொள்ளையடிக்க முயற்சி நடந்தது.

மீண்டும் ஒரு டாஸ்மாக் கடை திறந்தால் போலீசாருக்கு கூடுதல் பணிசுமை ஏற்படும். தற்போது பள்ளிகொண்டா - குடியாத்தம் சாலையில் உள்ள வியாபாரிகள் எந்த பிரச்சினையும் இல்லாமல் வியாபாரம் செய்து வருகின்றனர். டாஸ்மாக் கடை திறந்தால் மதுபிரியர்களின் தொந்தரவு தாங்க முடியாது என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

எனவே, பள்ளிகொண்டா பஸ் நிறுத்தத்தில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது, மீறி கடையை திறந்தால் போராட்டம் நடத்த போவதாக வணிகர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story