இந்தியாவின் பிரதமரை தமிழக மக்கள் தான் முடிவு செய்வார்கள் ஈரோட்டில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேச்சு
இந்தியாவின் பிரதமரை தமிழக மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்று ஈரோட்டில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார்.
ஈரோடு,
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ., மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் மூலம் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று 2–வது நாளாக ஈரோட்டிற்கு வந்து மரப்பாலம் பகுதியில் மக்களை சந்தித்தார். முன்னதாக அவருக்கு கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. திறந்த வேனில் நின்றபடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
மத்திய அரசு தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இந்த ஆட்சியில் தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளது. சில கட்சியினர் பண மூட்டைகளுடன் உங்களை தேடி வருவார்கள். தமிழகம் முன்னேற மாற்றம் தேவை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று தர நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இந்தியாவின் பிரதமரை தமிழக மக்கள் தான் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.
அப்போது அவருடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அண்ணா தொழிற்சங்க பேரவை ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் எம்.ஏ.ஸ்டார்பாபு, அவை தலைவர் அன்பழகன், மேற்கு மண்டல பொறுப்பாளர் பி.பழனியப்பன், மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் எஸ்.ஆர். செல்வம், ஈரோடு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் ஜம்பை செல்வம், ஈரோடு மாநகர் மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் ராஜா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராஜேஸ்வரி, துணைத்தலைவர் நல்லசிவம், இணை செயலாளர்கள் சரவணன், ஜெகதீஸ் மற்றும் பகுதி செயலாளர்கள் சீனிவாசன், ஜான்நெல்சன் உள்ளிட்டோர் இருந்தனர்.
இதேபோல் பவானி, ஆப்பக்கூடலில் நடந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மத்தியில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பேசினார்.