7 பேர் விடுதலை விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் பேட்டி


7 பேர் விடுதலை விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் பேட்டி
x
தினத்தந்தி 18 Feb 2019 4:45 AM IST (Updated: 18 Feb 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

7 பேர் விடுதலை விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கூறினார்.

புதுக்கோட்டை,

பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் சென்று நடந்தவற்றை மக்களிடம் எடுத்துக்கூறி மக்கள் சந்திப்பு என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று 17-வது மாவட்டமாக புதுக்கோட்டையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு பரிந்துரைக்கும் 7 பேரின் விடுதலை தொடர்பாக கவர்னர் எந்தவிதமான நடவடிக்கையும் கடந்த 5 மாதங்களாக எடுக்கவில்லை. பேரறிவாளன் தோற்றத்தில் நடிகர்போல் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். நடிகராக இருந்திருந்தால் பேரறிவாளன் எப்போதோ விடுதலை ஆகியிருப்பார். பேரறிவாளனை விடுவிக்க கையெழுத்திடுங்கள் என்ற கோரிக்கையை மட்டுமே என்னால் வைக்க முடியும். 7 பேர் விடுதலை விவகாரத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் சட்டத்தை மதிப்பதில்லை.

உச்சநீதிமன்றம் அவர்களை விடுதலை செய்யலாம் என்று கூறிய பிறகும், 7 பேரும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை. இருப்பினும் மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்கு இது தொடர்பாக எடுத்து செல்ல நான் விரும்பவில்லை. மக்கள் சந்திப்பின் மூலம் மக்களே கவர்னருக்கு அழுத்தம் கொடுத்து 7 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதில் அரசியல் செய்ய நான் விரும்பவில்லை. மக்கள் சந்திப்பின்போது பலர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம். தேர்தலை புறக்கணிப்பு செய்யலாம் என பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள். அவர்கள் கருத்துக்களை உள்வாங்கி அனைத்து மாவட்டங்களுக்கும் சென்ற பின்னர் ஒருங்கிணைப்பாளர்கள் உடன் இது குறித்து கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story