அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு தனி வார்டு அமைத்து தர கோரிக்கை
அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு தனி வார்டு அமைத்து தர வேண்டும் என்று மாவட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது.
சிவகங்கை,
மாவட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் முத்தராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பழனிவேலு வரவேற்று பேசினார். இதில் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:– ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீதான நடவடிக்கைளை ரத்து செய்ய வேண்டும்.
பேச்சுவார்த்தை மூலம் அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும். அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சிகிச்சை பெற தனி வார்டு அமைத்து தர வேண்டும். ஒய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவித்த பொங்கல் போனஸ் இன்னும் பல இடங்களில் வழங்கப்படவில்லை.
இதுபோல அடையாள அட்டையும் இதுவரை வழங்கப்படவில்லை. அவற்றை உனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். காளையார் கோவில் ஊராட்சியை பேரூராட்சியாக அறிவிக்க வேண்டும். வறண்ட கிடக்கும் காளையார் கோவில் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அத்துடன் இங்கு புதியதாக கட்டப்பட்ட தாலுகா அலுவலக கட்டிடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.