ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் குதிரைவண்டி எல்கை பந்தயம்


ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் குதிரைவண்டி எல்கை பந்தயம்
x
தினத்தந்தி 17 Feb 2019 10:45 PM GMT (Updated: 17 Feb 2019 8:18 PM GMT)

கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி குதிரை வண்டி எல்கை பந்தயம் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரிசு வழங்கினார்.

கரூர்,

கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை), மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கபடி, கிரிக்கெட், சதுரங்க போட்டி, மாரத்தான் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு, கடந்த வாரம் பரிசுகள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று கரூர் பாலிடெக்னிக் முன்பு ஈரோடு ரோட்டில் குதிரைவண்டி எல்கை பந்தயம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கீதா எம்.எல்.ஏ., மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் ஆகியோர். முன்னிலை வகித்தனர். போட்டி தொடங்கியதும் குதிரைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன. இதில் பெரியகுதிரை, நடுகுதிரை, புதுகுதிரை என 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. பெரிய குதிரை பிரிவில் 10 மைல் தூரமும், நடு குதிரை பிரிவில் 8 மைல் தூரமும், புது குதிரை பிரிவில் 6 மைல் தூரமும் பந்தய தூரமாக நிர்ணயிக்கப்பட்டன. இதில் கரூர், சேலம், கோவை, திருச்சி, லால்குடி, ஸ்ரீரங்கம், தஞ்சாவூர், பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து மொத்தம் 58 குதிரை வண்டிகள் பங்கேற்றன.

கரூர் பாலிடெக்னிக் அருகே ஈரோடு ரோட்டில் பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் திரண்டு நின்று, மின்னல் வேகத்தில் குதிரைகள் ஓடுவதை பார்த்து கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். குதிரை திசைமாறி ஓடிவிடக்கூடாது என்பதற்காக அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் கரூர் டவுன் போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். குதிரைகள் ஓடும் போது, அதன் அருகே இளைஞர்கள் உள்ளிட்டோர் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் நின்றனர். இதைக்கண்ட போலீசார் அவர்களுக்கு அறிவுரை கூறி ஓரமாக நின்று வேடிக்கை பார்க்குமாறு எச்சரித்தனர்.

இந்த குதிரை வண்டி எல்கை பந்தயத்தில் பெரியகுதிரை, நடுகுதிரை பிரிவில் கோவை அணியும், புதுகுதிரை பிரிவில் கரூர் அணியும் முதல் இடம் பெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 5 இடங்களை பிடித்தவர்களுக்கு ரூ.25 ஆயிரத்தில் இருந்து பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மொத்தம் ரூ.1 லட்சத்து 71 ஆயிரம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. பரிசுகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். இதில், மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளர் பி.சிவசாமி, இளைஞரணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், தொழிற்சங்க செயலாளர் பொரணி கணேசன், கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன், ஹீரா கேபிடள்ஸ் பாலகுருசாமி, முன்னாள் மாணவரணி செயலாளர் என்.தானேஷ், கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story