மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் கல்விச்சீர் வழங்கும் விழா


மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் கல்விச்சீர் வழங்கும் விழா
x
தினத்தந்தி 18 Feb 2019 3:00 AM IST (Updated: 18 Feb 2019 2:13 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது.

சேலம், 

சேலம் மாவட்டம், தலைவாசல் ஒன்றியம், பெரியேரி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திருவள்ளூவர் நற்பணி மன்றம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பில் பீரோ, மின்விசிறி, பிரிண்டர் எந்திரம், நாற்காலிகள் உள்பட பள்ளிக்கு தேவையான பொருட்களை தலைமை ஆசிரியர் ராணியிடம் கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி, புதுக்கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு மேஜை, நாற்காலி, பீரோ, புத்தக அலமாரி, மின்விசிறி உள்ளிட்ட ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை பொதுமக்கள் கல்விச்சீராக வழங்கினார்கள். விழாவில் கல்வி புரவலர் திட்டத்தை வட்டார கல்வி அலுவலர் அமலா தொடங்கி வைத்தார். இதில் 10 பேர் புரவலர்களாக சேர்ந்தனர். இதில் காடையாம்பட்டி வட்டார வள மைய மேற்பார்வையாளர் செல்வம், ஆசிரியர் ஜமுனா, இந்துமதி, ஹரிசங்கர், தலைமை ஆசிரியை மல்லிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேச்சேரி அருகே மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 94 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஊர் பொதுமக்கள் சார்பில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளிக்கு தேவையான ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை வழங்கினார்கள்.

மேட்டூரை அடுத்த மாதையன்குட்டையில் உள்ள கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு ஊர்பொதுமக்கள் சார்பில் கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒலிபெருக்கி, மைக், உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மாதையன்குட்டை பஸ் நிலையத்தில் இருந்து பொதுமக்கள் மேள தாளத்துடன் ஊர்வலமாக பள்ளிக்கு புறப்பட்டு வந்தனர்.

இதில் கொளத்தூர் வட்டார மேற்பார்வையாளர் இசையரசி, ஆசிரிய பயிற்சியாளர் ஆசாத், பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமி, உதவி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவி சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தாராமங்கலம் அருகில் உள்ள ஆரூர்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு வட்டார கல்வி அலுவலர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி முன்னிலை வகித்தார். கலைச்செல்வி வரவேற்றார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆறுமுகம், ஆசிரியர் பயிற்றுனர் லதா ஆகியோர் கலந்து கொண்டனர். அரிமா சங்கம், அப்துல்கலாம் சிறகுகள் அமைப்பு உள்பட பல அமைப்புகள் பள்ளிக்கு தேவையான ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வழங்கினார்கள். முடிவில் மீனாட்சி நன்றி கூறினார்.

தாராமங்கலம் தெற்கு ரதவீதி பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் சந்திரமோகன், ஆறுமுகம், அ.தி.மு.க. குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சீர் வழங்கியவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி நன்றி கூறினார்.

Next Story