பொங்கலூர் அருகே, தேங்காய் வியாபாரி கொலையில் ஆசாமி கைது


பொங்கலூர் அருகே, தேங்காய் வியாபாரி கொலையில் ஆசாமி கைது
x
தினத்தந்தி 18 Feb 2019 4:15 AM IST (Updated: 18 Feb 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

பொங்கலூர் அருகே தேங்காய் வியாபாரி கொலையில் ஆசாமியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அண்ணனின் மோட்டார் சைக்கிளை திருப்பி கொடுக்காததால் அண்ணனுடன் சேர்ந்து கொன்றதாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பொங்கலூர், 

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள கோவில்பாளைத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 65). தேங்காய் வியாபாரி. வீட்டின் அருகில் தேங்காய் களமும் வைத்துள்ளார். இவரது மனைவி மாராத்தாள் (58). இவர்களுக்கு ராமேஸ்வரி (26) என்ற மகளும், சண்முகம் (25) என்கிற மகனும் உள்ளனர். இதில் ராமேஸ்வரிக்கு திருமணமாகி சேமலைகவுண்டன்பாளையத்தில் கணவருடன் வசித்து வருகிறார். சண்முகத்திற்கு திருமணமாகவில்லை.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி சண்முகம் ஆந்திரா சென்று விட்டார். அதன்பின்னர் 11-ந் தேதி காலையில் பழனிசாமி வீட்டிற்கு பால் வியாபாரி சென்றுள்ளார். அப்போது வீட்டின் வராண்டாவில் பழனிசாமி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். வீட்டினுள் மாராத்தாள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இது குறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்றனர். அங்கு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாராத்தாளை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சண்முகம் வெளியூர் சென்றதை தெரிந்து கொண்ட மர்ம ஆசாமிகள், பழனிசாமியும், அவருடைய மனைவி மாராத்தாளும் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு, சம்பவத்தன்று நள்ளிரவு அங்கு சென்று பழனிசாமியை கொலை செய்து விட்டு, அவருடைய மனைவியை தாக்கி விட்டு வீட்டின் பீரோவை உடைத்து அதில் இருந்த 2 பவுன்நகையை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பழனிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்னர்.

இந்த கொலை தொடர்பாக அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் அவினாசிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுச்சாமி, பல்லடம், காமநாயக்கன்பாளையம் மற்றும் மங்கலம் ஆகிய போலீஸ் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொலை நடந்த பிறகு பழனிசாமியின் தேங்காய் களத்தில் வேலை பார்த்த கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சித்தே கவுடா உள்பட 2 பேரை காணவில்லை. எனவே அவர்கள் மீது தனிப்படை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை தேடி கர்நாடக மாநிலத்திற்கு தனிப்படை போலீசார் சென்றனர். அங்கு சித்தே கவுடாவின் தம்பி சந்திரசேகர கவுடாவை (48) தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சந்திரசேகர கவுடா, சித்தே கவுடா உள்பட 3 பேர் சேர்ந்து பழனிசாமியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சந்திரசேகர கவுடாவை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் சந்திரசேகரக கவுடா போலீசில் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

தேங்காய் வியாபாரி பழனிசாமியிடம் எனது அண்ணன் சித்தே கவுடா முன்பணம் வாங்கிக்கொண்டு தேங்காய் களத்தில் வேலை செய்து வந்துள்ளார். மேலும் வாங்கிய பணத்திற்கு ஈடாக எனது அண்ணனின் மோட்டார் சைக்கிளை பழனிசாமி வாங்கி வைத்துள்ளார். சிறிது காலம் கழித்து வாங்கிய முன்பணத்தை எனது அண்ணன் சித்தே கவுடா, தேங்காய் வியாபாரி பழனிசாமியிடம் திருப்பி கொடுத்துவிட்டார். ஆனால் மோட்டார் சைக்கிளை பழனிசாமி திருப்பி தராமல் இருந்துள்ளார்.

சம்பவத்தன்று நான், எனது அண்ணனை பார்க்க வந்தேன். அப்போது எனது அண்ணன் இது குறித்து என்னிடம் கூறினார். பணத்தையும் பெற்றுக்கொண்டு மோட்டார் சைக்கிளையும் திருப்பி கொடுக்காமல் இருந்ததால் பழனிசாமியை கொலை செய்ய திட்டம் தீட்டினோம்.

அதன்படி சம்பவத்தன்று இரவு பழனிசாமியின் வீட்டிற்கு நான், எனது அண்ணன் சித்தே கவுடா உள்பட 3 பேர் சென்றோம். அங்கு வீட்டின் வெளியே படுத்திருந்த பழனிசாமியை கடப்பாரை கம்பியால் தலையில் அடித்தோம். இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். அப்போது வீட்டுக்குள் படுத்து இருந்த அவருடைய மனைவி மாராத்தாள் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார். அவரையும் அதே கம்பியால் கழுத்திலும் குத்தினோம். பின்னர் வீட்டில் இருந்த இரண்டு பவுன் நகையை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டோம். இதில் பழனிசாமி இறந்து விட்டார்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சித்தே கவுடா மற்றும் அவருடன் வேலை பார்த்த மற்றொரு ஆசாமியையும் போலீசார் தேடி வருகிறார்கள். இதில் கைது செய்யப்பட்டுள்ள சந்திரசேகர கவுடா மீது கர்நாடக மாநிலத்தில் 2 கொலை வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ள மாராத்தாளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Next Story