குமரியில் கத்தை, கத்தையாக பணம் பறிமுதல்: 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எப்போது? லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி விளக்கம்


குமரியில் கத்தை, கத்தையாக பணம் பறிமுதல்: 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எப்போது? லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி விளக்கம்
x
தினத்தந்தி 17 Feb 2019 11:15 PM GMT (Updated: 17 Feb 2019 8:58 PM GMT)

குமரி மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய 2 அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்வது எப்போது? என்பது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

நாகர்கோவில்,

நெல்லை மாவட்டம் வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் மாடசாமி சுந்தர்ராஜ் (வயது 48). இவர் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் இரவு கலெக்டர் அலுவலகத்துக்கு காரில் வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே வந்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக காரை மடக்கி சோதனை செய்தனர். லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன் தலைமையிலான போலீசார் மற்றும் தோவாளை தாசில்தார் திருவாழி ஆகியோர் இணைந்து இந்த சோதனையை நடத்தினர்.

அப்போது காரில் கத்தை கத்தையாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இந்த பணம் எப்படி வந்தது? என்பது பற்றி மாடசாமி சுந்தர்ராஜிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால் அவர் பதில் எதுவும் கூறாமல் திருதிருவென முழித்தார். இந்த பணத்துக்கு அவர் கணக்கு தெரிவிக்காததால் உடனே பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வகையில் ரூ.4 லட்சத்து 9 ஆயிரத்து 380 பறிமுதல் செய்யப்பட்டது.

அரசு பணிகளை டெண்டர் விடுவது தொடர்பாக ஒப்பந்தகாரர்களிடம் இருந்து இந்த பணத்தை மாடசாமி சுந்தர்ராஜ் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுத்த ஒப்பந்ததாரர்கள் யார் யார்? என்ற விவரம் தெரியவில்லை.

இதைத் தொடர்ந்து பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் அங்கு எந்தவொரு ஆவணமும் சிக்கவில்லை. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கிருந்து புறப்பட்டனர். பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளரிடம் இருந்து கணக்கில் வராத பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதே போல கடந்த சில தினங்களுக்கு முன் வேர்கிளம்பி பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி என்பவரிடம் இருந்து கணக்கில் வராத பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்த னர். ஆனாலும் போலீசாரிடம் சிக்கிய 2 அதிகாரிகள் மீதும் இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “2 அதிகாரிகளும் அரசு பணிகளை டெண்டர் விடுவதற்கு லஞ்சம் வாங்கியதாக எங்களுக்கு புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து 2 பேரையுமே கண்காணித்து வந்தோம். பின்னர் சோதனை நடத்தி 2 அதிகாரிகளிடம் இருந்து கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்துள்ளோம். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்ததும் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Next Story