கவர்னர் புதுவை திரும்பியதே வெற்றி தான் முதல்–அமைச்சர் நாராயணசாமி பேச்சு


கவர்னர் புதுவை திரும்பியதே வெற்றி தான் முதல்–அமைச்சர் நாராயணசாமி பேச்சு
x
தினத்தந்தி 17 Feb 2019 10:45 PM GMT (Updated: 17 Feb 2019 9:05 PM GMT)

கவர்னர் புதுவை திரும்பியதே வெற்றி தான் என்று கவர்னர் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடியை கண்டித்து முதல்–அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கடந்த 13–ந் தேதி முதல் கவர்னர் மாளிகை முன்பு தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் தர்ணா போராட்டத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

மக்கள் நலத்திட்டங்களுக்கான கோப்புகளை அமைச்சர்கள் தயாரித்து கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பினால் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் கிரண்பெடி திருப்பி அனுப்பி வருகின்றார். இதனால் மக்கள் நலத்திட்டங்களை இந்த அரசால் நிறைவேற்ற முடியவில்லை. எனவே கோப்புகளுக்கு உடனடியாக ஒப்புதல் தரக்கோரி கடந்த 13–ந் தேதி முதல் நானும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். நாங்கள் போராட்டம் ஆரம்பித்த அடுத்த நாள் காலையில் (14–ந் தேதி) அவர் கவர்னர் மாளிகையை விட்டு வெளியேறி டெல்லி சென்றுவிட்டார். வருகிற 21–ந் தேதி தான் புதுவை திரும்புவேன் என்றார்.

இந்த நிலையில் நமது தொடர் தர்ணா போராட்டத்தின் காரணமாக கவர்னர் புதுவை திரும்பியுள்ளார். இதுவே நமது போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி. சிக்கனத்தை பற்றி பேசும் புதுச்சேரி மாநில மக்களின் வரிப்பணத்தில் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநில நிகழ்ச்சிகளிலும், ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளிலும் கவர்னர் பங்கேற்றுள்ளார். எப்போதும் சுற்றுலா வளர்ச்சிக்கழக ஊழியர்கள் 10 பேர் தான் கவர்னர் அலுவலகத்தில் பணிபுரிவார்கள். தற்போது 59 பேர் உள்ளனர். கிரண்பெடி செல்லும் இடங்களுக்கெல்லாம் 3 கேமரா மேன்களும் செல்கின்றனர். அவர்களுக்கும் புதுச்சேரி மக்களின் வரிப்பணம் சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story