மக்கள் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் ரங்கசாமி, எம்.பி. சீட்டுக்கு கையேந்துகிறார் சிவா எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு


மக்கள் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் ரங்கசாமி, எம்.பி. சீட்டுக்கு கையேந்துகிறார் சிவா எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 Feb 2019 4:00 AM IST (Updated: 18 Feb 2019 2:35 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் பிரச்சினைகளை பற்றி கவலைப்படாமல் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, எம்.பி. சீட்டுக்காக கையேந்துகிறார் என்று சிவா எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:–

புதுச்சேரியில் மக்கள் பிரச்சினைகளுக்காக முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தும் நிலையில் எதிர்க்கட்சி தலைவர் அதைப்பற்றி எதையும் கண்டுகொள்ளாமல் ஒரு எம்.பி. சீட்டுக்காக கையேந்திக்கொண்டு சென்னை சென்று வந்துள்ளார். புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்றும், கவர்னருக்குத்தான் அதிகாரம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

நாங்கள் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு கவர்னரின் ஆய்வுகள், அத்துமீறல்களை எதிர்த்து போராடி வெற்றியும் பெற்றுள்ளோம். தற்போது புதுவையில் ஆளுங்கட்சியாக உள்ளோம். இருந்தும் தமிழகத்தைப்போன்ற நிலையை நாங்கள் இன்னும் எடுக்கவில்லை.

அப்படி ஒரு நிலையை எடுத்தால் கவர்னர் கிரண்பெடி மகாராணி போன்று நகர்வலம் வரமுடியாது. அத்தகைய அளவுக்கு புதுச்சேரி மக்கள் கொதித்துப்போய் உள்ளனர். புதுவை மக்களுக்கான நலத்திட்டங்கள் எதையும் கவர்னர் கிரண்பெடி செயல்படுத்த விடவில்லை.

முதல்–அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். புதுச்சேரி மக்கள் மீது உண்மையிலேயே பா.ஜ.க.வுக்கு அக்கறையில்லை. அவர்கள் எந்த முடிவினை வேண்டுமானாலும் எடுக்கட்டும்.

புதுவை போராட்டம் குறித்து மத்திய அரசு மூச்சுவிடவில்லை. புதுவை மக்களை மத்திய ஆட்சியாளர்கள் கிள்ளுக்கீரையாக பார்க்கிறார்கள். டெல்லியில் மக்களால் துரத்தியடிக்கப்பட்டவர், இங்கு மாளிகையில் இருந்து அதிகாரம் செலுத்துகிறார். மக்கள் ஆதரவைப்பெற்ற நாங்கள் பிளாட்பாரத்தில் அமர்ந்து போராடி வருகிறோம்.

இவ்வளவு பிரச்சினைகள் நடக்கும்போதும் புதுவையை சேர்ந்த 2 எம்.பி.க்கள் எங்கே தூங்குகிறார்கள் என்றே தெரியவில்லை. அது தெரிந்தால் நாங்கள் எழுப்பிவிடுவோம்.

இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. கூறினார்.


Next Story