விருத்தாசலத்தில் சமுதாய வளைகாப்பு விழா, 160 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள்
விருத்தாசலத்தில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் 160 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா விருத்தாசலம் புறவழிச்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார். சப்-கலெக்டர் பிரசாந்த், தாசில்தார் கவியரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட திட்ட அலுவலர் பழனி வரவேற்றார். விழாவில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 160 கர்ப்பிணிகளுக்கு மங்கலப்பொருட்கள், வளையல்கள், வெற்றிலை பாக்கு, கண்ணாடி மற்றும் பரிசு பொருட்களை சீர்வரிசையாக வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
இன்றைய குழந்தைகள்தான் நாளைய சமுதாயம். ஒரு குழந்தையின் வளர்ச்சி அக்குழந்தையின் தாயின் கர்ப்பபையில் உருவானபோதே ஆரம்பமாகிவிடுகிறது. ஆரோக்கியமான அறிவுத்திறன் நிறைந்த குழந்தையாக உருவாக, அந்த தாய் கர்ப்பம் ஆன நாளில் இருந்து தனது நலனில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை கர்ப்பிணிகளுக்கு வழங்கி வருகிறது. சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு கர்ப்பிணியும் ஆரோக்கியமான குழந்தையை ஈன்றெடுக்க அவர்கள் கர்ப்ப காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார முறை, ஊட்டச்சத்து முறை, உணவுமுறை, மருத்துவ பரிசோதனைகளின் அவசியம், கர்ப்பகாலத்தில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை, குழந்தை பராமரிப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு கல்வி மற்றும் கண்காட்சி மூலம் தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் விருத்தாசலத்தில் 1,207 கர்ப்பிணிகள் பயன்பெற்று வருகின்றனர். பெண்களின் வளர்ச்சிதான் சமுதாய வளர்ச்சியாகும். அதனால்தான் தமிழக அரசு பெண்களை மையப்படுத்தியே பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறது. இதனை பெண்கள் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார். இதையடுத்து கர்ப்பிணிகளுக்கு 5 வகையான ஆரோக்கிய உணவு வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story