தமிழகத்தில் கட்டாயப்படுத்தி ஒரு கூட்டணி உருவாகிறது மு.க.ஸ்டாலின் பேச்சு


தமிழகத்தில் கட்டாயப்படுத்தி ஒரு கூட்டணி உருவாகிறது மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 18 Feb 2019 4:15 AM IST (Updated: 18 Feb 2019 2:58 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கட்டாயப்படுத்தி ஒரு கூட்டணி உருவாகிறது என்று கள்ளக்குறிச்சியில் நடந்த வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. இல்ல திருமண வரவேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

கள்ளக்குறிச்சி, 

விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனின் தம்பி கிஷோர்-அனுப்பிரியா ஆகியோரின் திருமண வரவேற்பு விழா நேற்று காலை கள்ளக்குறிச்சியில் உள்ள ராமச்சந்திரா அரவை மில் வளாகத்தில் நடந்தது.

விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தற்போது தேர்தல் நேரம் என்பதால் அரசியல் ரீதியாக கூட்டணி ஏற்படுகிறது. கூட்டணி முறையாக ஏற்பட்டால் அது தவறு அல்ல. கட்டாயப்படுத்தி ஏற்படக்கூடிய ஒரு கூட்டணி தமிழகத்தில் உருவாகியிருக்கிறது, உருவாகப்போகிறது. அதாவது எங்களோடு கூட்டணி வைக்கவில்லையெனில் குட்கா விவகாரத்தை பிரச்சினையாக்கி விடுவோம், 89 கோடி ரூபாய் வருமான வரித்துறை சோதனை ஆதாரம் எங்கள் கையில் இருக்கிறது, இதையெல்லாம் தாண்டி கோடநாடு விவகாரத்தை பிரச்சினையாக்கி விடுவோம், கொலை செய்த குற்றத்திற்கு சிறைக்கு போக வேண்டிய முதல்-அமைச்சர் தமிழ்நாட்டில் இருக்கிறார், அதை மறந்துவிடக்கூடாது என்று மிரட்டி, அச்சுறுத்தி அரசியல் ரீதியாக கூட்டணி பேசுகிறார்கள்.

18 எம்.எல்.ஏ.க்களின் பதவியை ஏன் பறித்தீர்கள்? பறித்தால்தான் இந்த ஆட்சி நிலைக்கும். அதுமட்டுமல்ல ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களின் நிலை என்னவாக போகிறது, மார்ச் முதல் வாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரப்போகிறது. அதில் நிச்சயமாக, உறுதியாக இந்த 11 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்பட வேண்டிய தீர்ப்புதான் வரப்போகிறது. அப்படி வரும்போது இந்த ஆட்சி நிச்சயமாக இருக்க வாய்ப்பே கிடையாது.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரப்போகிறது. இம்மாத இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. ஏப்ரல், மே மாதம் இந்தியா முழுவதும் தேர்தல் முழுமையாக முடிவுற்று மத்தியில் ஒரு புதிய ஆட்சி தி.மு.க. சுட்டிக்காட்டக்கூடிய பிரதமர் தலைமையில் அமையப்போகிறது, அதில் மாற்று கருத்து கிடையாது.

நியாயமாக பார்த்தால் நாடாளுமன்ற தேர்தலுடன் இந்த 21 தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் வைத்தாக வேண்டும்.

1,200 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு சிறப்பு நிதி உதவியாக தலா ரூ.2 ஆயிரத்தை இன்னும் கொடுக்க ஆரம்பிக்கவே இல்லை. அதற்குள் கொடுத்ததாக ஆதாரம் காட்டுகிறார்கள். உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி 3 லட்சத்து 431 கோடி ரூபாய்க்கு மேல் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது, 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்கிறார்கள், 2 வருடத்தில் இதை கொடுத்திருக்கிறீர்களா?

அதேபோல் தமிழக அரசுக்கு பல விருதுகள் கிடைத்திருப்பதாக சொல்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் 4 முறை உணவு தானிய உற்பத்திக்கான இந்திய அரசின் உயரிய விருது கிடைக்கப்பெற்றதாக கூறுகிறார்கள். உணவு உற்பத்தியில் விருது பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்குமேயானால் உணவு உற்பத்தியில் ஏன் மோசமான நிலையில் போயிருக்கிறது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து சாக வேண்டிய நிலைமை ஏன் ஏற்பட்டிருக்கிறது. விவசாயிகள் போராட வேண்டிய கட்டாயம் ஏன் வந்திருக்கிறது. மத்திய அரசு, விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் தர வேண்டிய அவசியம் ஏன் வந்திருக்கிறது. தமிழக அரசும் ரூ.2 ஆயிரம் தருவோம் என்று அறிவித்திருக்கிறார்கள், ஏன் அந்த சூழல் வந்தது. விருது பெறக்கூடிய அளவிற்கு வளர்ச்சி வந்திருந்தால் இந்த தொகையை வழங்க வேண்டிய அவசியம் இல்லையே?

தமிழகம் முழுவதும் உள்ள 12,500-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் கடந்த ஜனவரி 3-ந் தேதி முதல் ஊராட்சி சபை கூட்டங்களை தி.மு.க. சார்பில் நடத்திக்கொண்டிருக்கிறோம். திருவாரூரில் புலிவலம் கிராமத்தில் ஊராட்சி சபை கூட்டத்தை நான் தொடங்கி வைத்தேன். அதுபோல் ஒவ்வொரு ஊராட்சியிலும் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதைக்கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத எடப்பாடி பழனிசாமி, திடீரென்று ஸ்டாலினுக்கு கிராமங்களின் நினைப்பு வந்துவிட்டது. உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது உள்ளாட்சி அமைப்பு கூட்டம் நடத்தவில்லை, ஊராட்சி சபை கூட்டம் நடத்தவில்லை என்று தவறான செய்தியை தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

நான் பலமுறை சொல்லி வருகிறேன். நான் போகாத கிராமமே தமிழகத்தில் இருக்க வாய்ப்பே கிடையாது. இந்த இயக்கத்தில் நான் தீவிரமாக பணியாற்ற தொடங்கிய காலத்தில் இருந்து மாவட்ட, நகர பகுதிகளை விட கிராமப்புற பகுதிகளுக்கு சென்று கழக பணிகளை மேற்கொண்டு கொடியேற்றி வைத்துள்ளேன்.

தமிழத்தில் கொடிகள் கம்பீரமாக பறந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் அதிகளவில் கொடியேற்றி இந்த இயக்கத்திற்கு வலுசேர்த்தவர் கருணாநிதி. அதற்கடுத்து அதிகளவில் கொடியேற்றியவன் கருணாநிதி மகன் ஸ்டாலின், இந்த அடியேன்தான்.

எடப்பாடி பழனிசாமிக்கும் எனக்கும் ஒரேயொரு பந்தயம். இந்த விழுப்புரம் மாவட்டத்திற்கு யார் துணையும் இல்லாமல் நான் தன்னந்தனியாக வந்து நிற்கிறேன். என்னை பார்த்ததும் இவன்தான் ஸ்டாலின், இவன் தான் கருணாநிதி மகன் என்று அனைவரும் சொல்லக்கூடிய அளவிற்கு எனது பயணம் இருக்கிறது. ஆனால் நீங்கள் விழுப்புரம் மாவட்டத்திற்கு வர வேண்டாம், போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் தன்னந்தனியாக உங்களை தேர்ந்தெடுத்த சட்டமன்ற தொகுதியான எடப்பாடியில் வந்து நில்லுங்கள். உங்களை யார்? என்று கேட்கிறார்களா, இல்லையா? என்று பாருங்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இருக்கிற நீங்கள் எங்களை பார்த்து கேலி, கிண்டல் செய்கிறீர்கள், எப்போது தேர்தல் வரப்போகிறது, மக்கள் எப்போது வாக்களிக்க போகிறார்கள், சரியான தீர்ப்பு தரப்போகிறார்கள் என்று நாங்கள் எல்லாம் காத்திருக்கிறோம். அதற்கு நீங்கள் தயாராக இருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மாவட்ட எல்லையான கள்ளக்குறிச்சி வி.கூட்டுசாலை அருகில் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி தலைமையில் உதயசூரியன் எம்.எல்.ஏ. உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, எ.வ.வேலு, உதயசூரியன், ராதாமணி, மஸ்தான், மாசிலாமணி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி, சேலம் மாவட்ட நிர்வாகி சிவலிங்கம், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் செல்வநாயகம், கள்ளக்குறிச்சி நகர செயலாளர் சுப்ராயலு, ஒன்றிய செயலாளர்கள் முனியன், நெடுஞ்செழியன், ஆறுமுகம், பாண்டுரங்கன், பெருமாள், வைத்தியநாதன், ராஜவேல், துரைராஜ், முருகன், ஏகாம்பரம், உளுந்தூர்பேட்டை நகர செயலாளர் டேனியல்ராஜ், மாவட்ட துணைச்செயலாளர் அமிர்தவள்ளிகோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராஜி, ஒன்றிய விவசாய அணி செயலாளர் பாரதிதாசன், வக்கீல் அணி நிர்வாகிகள் மணலூர்பேட்டை ஜெய்கணேஷ், சையத்அலி, பாலாஜி பூபதி, சிவக்குமார், ஒன்றிய பிரதிநிதி பஷீர், மணலூர்பேட்டை முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் அண்ணாத்துரை, தியாகதுருகம் மவுண்ட் பார்க் பள்ளி தாளாளர் மணிமாறன், ஒன்றிய துணை செயலாளர் அண்ணாத்துரை, மாவட்ட பிரதிநிதி மலையரசன், கள்ளக்குறிச்சி ஆடிட்டர் சாமிசுப்பிரமணியன், செங்கோட்டை மைதீன் டிம்பர்ஸ் உரிமையாளர் மகுதுமீரான், ரிஷிவந்தியம் நிர்வாகிகள் கோவிந்தராஜ், பிரபு, ஏழுமலை, லிங்கநாதன், சத்தியமூர்த்தி, அரிகிருஷ்ணன், சண்முகம், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விஜய்ஆனந்த், சங்கராபுரம் வக்கீல் அணி நிர்வாகி அசோக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருமண வரவேற்பு விழாவில் தேர்தல் நிதியாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வசந்தம்கார்த்திகேயன் எம்.எல்.ஏ.வும், கள்ளக்குறிச்சி நகர செயலாளர் சுப்ராயலு ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர். முடிவில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. நன்றி கூறினார்.

Next Story