மாநகராட்சி பள்ளிகளில் 6,666 கண்காணிப்பு கேமராக்கள் ரூ.24¼ கோடியில் பொருத்தப்படுகிறது
ரூ.24 கோடியே 30 லட்சம் செலவில் மாநகராட்சி பள்ளிகளில் 6,666 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
மும்பை,
ரூ.24 கோடியே 30 லட்சம் செலவில் மாநகராட்சி பள்ளிகளில் 6,666 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
கண்காணிப்பு கேமரா
மும்பை மாநகராட்சி பள்ளிகளில், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட அசாதாரண சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனியார் பள்ளிகளை போல் மாநகராட்சி பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என பெற்றோர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து மும்பையில் உள்ள அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும், கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என மாநகராட்சி அறிவித்தது.
ரூ.24.30 கோடி
இதற்காக பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கப்பட்டது. இதன்படி மாநகராட்சி பள்ளிகளில் ரூ.24 கோடியே 30 லட்சம் செலவில் 6,666 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
இதுபற்றி மாநகராட்சியின் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாநகராட்சி பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட இருக்கின்றன. கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் இந்த நிதியாண்டுக்குள் பொருத்தப்படும்.
இந்த கேமராக்கள் கம்ப்யூட்டர் மூலம் இணைக்கப்பட்டு பள்ளி தலைமையாசிரியர் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்’’ என்றார்.
Related Tags :
Next Story