பஞ்சப்பள்ளி அருகே வாழை தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம் விவசாயிகள் கவலை
பஞ்சப்பள்ளி அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறி யானைகள் வாழை தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 50–க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்தாண்டு பருவமழை பொய்த்து போனதால் இந்த பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமங்களில் புகுந்து பயிர்களை தின்றும், மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பஞ்சப்பள்ளி காப்புக்காட்டில் இருந்து 15–க்கும் மேற்பட்ட யானைகள் அங்குள்ள ஏரியில் உற்சாக குளியல் போட்டன. பின்னர் இரவு பஞ்சப்பள்ளி அருகே உள்ள ஜலதிம்மனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சுரேஷ் என்பவர் பயிரிட்டுள்ள வாழை தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்தன. இதனால் 500–க்கும் மேற்பட்ட வாழை மரங்களை ஒடித்து தின்றும், மிதித்தும் நாசம் செய்துள்ளன. அறுவடைக்கு தயாராக இருந்த இந்த மரங்களின் மதிப்பு ரூ.5 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் அருகே உள்ள விவசாய நிலங்களில் புகுந்த யானைகள் தக்காளி, வெண்டை உள்ளிட்ட செடிகளை மிதித்து சேதப்படுத்தின. நேற்று தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் வாழை மரங்கள் மற்றும் காய்கறி செடிகளை யானைகள் சேதப்படுத்தியதை கண்டு விவசாயிகள் கவலை அடைந்தனர். யானைகள் விவசாய நிலங்களில் புகுவதை தடுக்கவும், வாழை உள்ளிட்ட விவசாய பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.