முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் பரிசு வழங்கினார்.
தர்மபுரி,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தர்மபுரியில் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினார்கள். இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார். மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள், மாநில அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் தர்மபுரி மண்டலம் சார்பில் 13 வழித்தடங்களில் புதிய புறநகர் பஸ்களும், 4 வழித்தடங்களில் டவுன் பஸ்கள் வழிநீட்டிப்பும், செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்க தொடக்க விழா தர்மபுரி டவுன் பஸ்நிலையத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் லாரன்ஸ், துணை மேலாளர்கள் சிவமணி, ஜெயபால், ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு புதிய வழித்தடங்களில் பஸ்களை இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆவின் தலைவர் டி.ஆர்.அன்பழகன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், கூட்டுறவு சங்க தலைவர்கள் கோவிந்தசாமி, சிவப்பிரகாசம், பழனிசாமி, அங்குராஜ், ஆறுமுகம், முன்னாள் நகர கூட்டுறவு வங்கி தலைவர் குருநாதன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பூக்கடை ரவி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story