குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பொதுமக்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பொதுமக்களால் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல் அருகே உள்ள காதப்பள்ளி அலையாகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-
அலையாகவுண்டம்பாளையம் கிராமத்தில் 70 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதகாலமாக ஆழ்துளை கிணறு வறண்டு விட்டது. எனவே குடிநீர் வினியோகம் செய்வது இல்லை.
எனவே நாங்கள் சுமார் 2 கி.மீட்டர் தூரம் சென்று விவசாய கிணறுகளில் இருந்து குடிநீர் பிடித்து வருகிறோம். எனவே புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் வந்த பொதுமக்களால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் எருமப்பட்டி அருகே உள்ள வரதராஜ புரத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வரதராஜபுரம் கிராமத்தில் சிலர் ரசாயனம் கலந்த மண் அரைக்கும் தொழிற்சாலையை இயக்கி வருகின்றனர். இங்கு கரிசல் மண்ணை எந்திரம் மூலம் அரவை செய்வதால் மண் துகள்கள் கிணறுகளிலும், குடிநீர் தொட்டியிலும், விவசாய நிலங்களிலும் காற்று மூலம் பரவுகிறது.
இதனால் சுவாச பிரச்சினை, அரிப்பு, தோல் நோய் போன்றவை அடிக்கடி ஏற்படுகிறது. மேலும் நிலத்தடி நீர் முற்றிலும் மாசுபடும் நிலையில் உள்ளது. இந்த துகள்கள் ஏரியில் படிவதால் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. ஊரை சுற்றி உள்ள 2 கி.மீட்டர் விவசாய நிலம் அழிந்து விடும் நிலையில் உள்ளது.
எனவே அந்த தொழிற்சாலைக்கான மின் இணைப்பை துண்டித்து, அதை தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.
Related Tags :
Next Story