3 பேர் பலியான விபத்துக்கு காரணமான போலீஸ் வாகன டிரைவர் கைது
3 பேர் பலியான விபத்துக்கு காரணமான போலீஸ் வாகன டிரைவர் கைது செய்யப்பட்டார். துறை ரீதியாக பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனைச்சாவடி அருகில் நேற்று முன்தினம் மாலை போலீஸ் வாகனம் மோதியதில் விழுப்புரம் அருகே மாங்குப்பத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி (வயது 60), கொண்டங்கி பாபு (30), உளுந்தூர்பேட்டை தாலுகா தொப்பையான்குளத்தை சேர்ந்த திருமுருகன் (30) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்து குறித்து வளவனூர் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கவனக்குறைவாகவும், அஜாக்கிரதையாகவும் வாகனத்தை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்தியதாக போலீஸ் வாகன டிரைவரான கடலூர் கோண்டூரை சேர்ந்த சரவணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் 3 பேர் பலியான விபத்துக்கு காரணமான போலீஸ் வாகன டிரைவர் சரவணனை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story