காட்பாடியில் பஸ்சில் இறந்த மூதாட்டியின் உடலை ரோட்டில் வீசிச்சென்ற கொடூரம் பொதுமக்கள் அதிர்ச்சி


காட்பாடியில் பஸ்சில் இறந்த மூதாட்டியின் உடலை ரோட்டில் வீசிச்சென்ற கொடூரம் பொதுமக்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 19 Feb 2019 3:45 AM IST (Updated: 19 Feb 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

காட்பாடியில் பஸ்சில் இறந்த மூதாட்டியின் உடலை டிரைவரும், கண்டக்டரும் ரோட்டில் வீசிச்சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காட்பாடி, 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் பூஷணம் (வயது 62). இவர் பெங்களூருவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் நேற்று முன்தினம் காலை ரெயில்மூலம் காட்பாடிக்கு வந்துள்ளார். காட்பாடியில் இறங்கிய அவர் புதிய பஸ்நிலையத்திற்கு செல்வதற்காக காட்பாடியில் இருந்து பாகாயத்திற்குசென்ற தனியார் பஸ்சில் ஏறி உள்ளார்.

கட்பாடி ரெயில்நிலையத்தில் இருந்து சிறிது தூரம் பஸ் சென்றதும் பஸ்சில் இருந்த பூஷணத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டு கீழே சாய்ந்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் பஸ்சிலேயே இறந்துவிட்டார். இதை பார்த்த டிரைவரும், கண்டக்டரும், மூதாட்டியுடன் யாராவது வந்திருக்கிறார்களா என்று விசாரித்தனர். ஆனால் யாரும் வரவில்லை.

அவருடன் யாரும் வராததால் சித்தூர் பஸ்நிலையத்தில் பஸ்சை நிறுத்தி பூஷணத்தின் உடலை பஸ்சில் இருந்து இறக்கி ரோட்டில் வீசிவிட்டு சென்றுவிட்டனர். இதுபற்றி தகவலறிந்ததும் காட்பாடி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி பூஷணத்தின் மகனுக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து அவருடைய மகன் மஞ்சுநாத் காட்பாடிக்கு வந்து தனது தாயார் பூஷணத்தின் உடலை பெற்றுக்கொண்டு சொந்த ஊரான செய்யாறுக்கு கொண்டு சென்றார்.

மேலும் பஸ்சில் இருந்து மூதாட்டியின் உடலை ரோட்டில் வீசிச்சென்ற தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story