என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு: தடயவியல் உதவி இயக்குனர் உள்பட 5 பேர் சாட்சியம் விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு


என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு: தடயவியல் உதவி இயக்குனர் உள்பட 5 பேர் சாட்சியம் விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 19 Feb 2019 3:15 AM IST (Updated: 19 Feb 2019 12:37 AM IST)
t-max-icont-min-icon

என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தடயவியல் உதவி இயக்குனர் உள்பட 5 பேர் நேற்று நாமக்கல் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். பின்னர் வழக்கு விசாரணையை நாளைக்கு (புதன்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

நாமக்கல், 

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23) கொலை வழக்கு தொடர்பான சாட்சி விசாரணை நாமக்கல் முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இதுவரை கோகுல்ராஜின் தாயார் சித்ரா, சகோதரர் கலைச்செல்வன், கோகுல்ராஜின் தோழி சுவாதி உள்பட பலர் சாட்சியம் அளித்து உள்ளனர்.

இதற்கிடையே நேற்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையொட்டி தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 15 பேரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அப்போது தடயவியல் உதவி இயக்குனர் நலினா, காடையாம்பட்டி ரெங்கநாதன், மின்வாரிய ஊழியர் பாஸ்கரன், மதுரை செல்வமணி, கொங்கணாபுரம் மாதேஸ் என மொத்தம் 5 பேர் சாட்சியம் அளித்தனர். அவர்களிடம் யுவராஜ் தரப்பு வக்கீல் கோபாலகிருஷ்ண லெட்சுமி ராஜூ குறுக்கு விசாரணை நடத்தினார். இதையடுத்து வழக்கு விசாரணையை நாளைக்கு (புதன்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

இதேபோல் யுவராஜ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை நாமக்கல் முதலாவது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கை மாஜிஸ்திரேட்டு வடிவேல் வருகிற மார்ச் மாதம் 4-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Next Story