திருமணமான பெண்ணுடன் தலைமறைவான வாலிபரின் தம்பி சாவு உடலை நடுரோட்டில் வைத்து உறவினர்கள் சாலை மறியல்


திருமணமான பெண்ணுடன் தலைமறைவான வாலிபரின் தம்பி சாவு உடலை நடுரோட்டில் வைத்து உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 18 Feb 2019 11:15 PM GMT (Updated: 18 Feb 2019 7:12 PM GMT)

அய்யம்பேட்டை அருகே திருமணமான பெண்ணுடன் தலைமறைவான வாலிபரின் தம்பி ரத்த வாந்தி எடுத்து இறந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் இறந்தவரின் உடலை நடுரோட்டில் வைத்து அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அய்யம்பேட்டை,

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள சக்கராப்பள்ளி ஹவ்வா நகரை சேர்ந்தவர் மைதீன்பாட்சா. இவருடைய மகன் சாகுல் அமீது(வயது 27). இவர், அய்யம்பேட்டையில் செல்போன் கடை வைத்துள்ளார். இவருடைய தம்பி பைசல் ரகுமான்(23). பட்டதாரியான இவர், தனது அண்ணன் சாகுல் அமீதுக்கு உதவியாக செல்போன் கடையில் இருந்து வந்தார். இவர்கள் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் சாகுல் அமீதுக்கு அதே ஊரைச்சேர்ந்த ஒரு திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கள் வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்கள்.

இது குறித்து திருமணமான பெண்ணின் தந்தை அய்யம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாயமான பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். தனது மனைவி வாலிபர் ஒருவருடன் மாயமான தகவல் அறிந்த அவர் வெளிநாட்டில் இருந்து அய்யம்பேட்டைக்கு வந்து பல்வேறு இடங்களில் தனது மனைவியை தேடினார். ஆனால் அவருடைய மனைவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தனது வீட்டில் பைசல்ரகுமான் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பைசல் ரகுமானை சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பைசல் ரகுமான் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பைசல்ரகுமான் தாயார் மும்தாஜ்பேகம் அய்யம்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மகன் பைசல்ரகுமானை, மாயமான பெண்ணின் உறவினர்கள் அழைத்துச்சென்று அடித்து துன்புறுத்தி விஷம் கலந்த பிஸ்கட்டை அவனது வாயில் வலுக்கட்டாயமாக திணித்ததாகவும் அதை(விஷம் கலந்த பிஸ்கட்) தின்ற தனது மகன் உயிருக்கு போராடி இறந்து விட்டதாகவும் கூறியுள்ளார். இதன்பேரில் அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் பைசல்ரகுமான் உடல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று மாலை அவரது சொந்த ஊரான சக்கராப்பள்ளிக்கு வந்து சேர்ந்தது. அப்போது தஞ்சை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் திரண்டிருந்த பைசல் ரகுமானின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பைசல்ரகுமான் உடலை நடுரோட்டில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இறந்த பைசல்ரகுமான் குடும்பத்துக்கு இழப்பீடும், பாதுகாப்பும் வழங்க வேண்டும், பைசல் ரகுமானை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படும் நபர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும். இது குறித்து புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக பொதுச்செயலாளர் இஸ்மாயில், இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் ரபீக் அகமது, மாவட்ட தலைவர் மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன், பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், தாசில்தார் கண்ணன், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், செங்குட்டுவன், நாகரெத்தினம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். அந்த பகுதியில் அசம்பாவிதங்களை தவிர்க்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மறியல் போராட்டத்தால் தஞ்சை-கும்பகோணம் நெடுஞ்சாலையில் நேற்று மாலை 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story