பள்ளி மாணவிகளுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் தி.மு.க.வினர், கலெக்டரிடம் மனு
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என தி.மு.க.வினர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
நாமக்கல்,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தி.மு.க. சார்பில் 175 ஊராட்சிகளில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டது.
இதில் பொதுமக்கள் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் கோரிக்கை மனு ஒன்றை தயார் செய்த தி.மு.க.வினர் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காந்திசெல்வன், நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் தலைமையில் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியத்தை சந்தித்து அந்த மனுவை அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
ஒட்டுமொத்த மாவட்ட மக்களையும் மிகவும் பாதித்துள்ள கடுமையான குடிநீர் தேவையை நிவர்த்தி செய்திடும் வகையில் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். குறிப்பாக ஆழ்துளை கிணறுகளில் பழுதாகி உள்ள மின்மோட்டார்களை சரிசெய்து, குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். ரேஷன்கார்டுதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படாத நிலை உள்ளது. மேலும் மளிகை பொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தப்படும் நிலையும் உள்ளது. அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும், பெண்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் அமைந்துள்ள மதுக்கடைகளை இடமாற்றம் செய்யவோ அல்லது மூடவோ ஆவன செய்திட வேண்டும். மேலும் சந்துகளில் செயல்படும் சட்ட விரோத மதுக்கடைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பொன்னுசாமி, ராமசாமி, மாநில நிர்வாகி நக்கீரன்,மாவட்ட துணைச் செயலாளர் விமலா சிவக்குமார், பொருளாளர் செல்வம், ராசிபுரம் நகர செயலாளர் சங்கர், நாமக்கல் நகர பொறுப்பாளர் ராணா ஆனந்த் மற்றும் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காந்திசெல்வன் மற்றும் எஸ்.ஆர். பார்த்திபன் ஆகியோர் கூறும்போது, பொதுமக்களின் அடிப்படை பிரச்சினை குறித்த எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் பெண்களை திரட்டி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் என்றனர்.
Related Tags :
Next Story