பி.ஏ.பி. வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட கோவை கல்லூரி மாணவர் பிணமாக மீட்பு
நெகமம் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட கோவை கல்லூரி மாணவர் பிணமாக மீட்கப்பட்டார்.
நெகமம்,
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 51), பனியன் நிறுவன தொழிலாளி.
இவருடைய மகன் இளங்கோவன் (23). இவர், கருமத்தம்பட்டி அருகே அரசூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் அதே கல்லூரியில் படித்து வந்த கோவையை சேர்ந்த சுஸ்வந்த் (22), பரத் (23), அரசூரை சேர்ந்த சுப்பிரமணியம் (22) ஆகியோரும் நண்பர்கள் ஆவர்.
இந்த நிலையில் பரத் தனது பிறந்தநாளையொட்டி தனது நண்பர்களான இளங்கோவன், சுஸ்வந்த், சுப்பிரமணியம் ஆகியோருக்கு விருந்து கொடுப்பதற்காக பல்லடம் அருகே ஆலமரத்து மேட்டில் உள்ள தனது அண்ணன் தோட்டத்திற்கு நேற்று முன்தினம் அழைத்து சென்றார்.
இதற்கிடையில், தோட்டத்தின் அருகில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் கல்லூரி மாணவர்கள் 4 பேரும் குளித்தனர். அப்போது வாய்க்காலில் ஆழமான பகுதிக்கு சென்ற இளங்கோவன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற நண்பர்கள் முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த நெகமம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பி.ஏ.பி. வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவரை தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நீண்ட நேரமாகியதால் தேடுதல் பணியை நிறுத்தினர்.
இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக கல்லூரி மாணவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று மாலை சுல்தான்பேட்டை அருகே உள்ள செஞ்சேரிமலை நகரகளந்தை பி.ஏ.பி. வாய்க்காலில் இளங்கோவனின் உடல் மிதந்து வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நெகமம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story