வாழப்பாடி அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பலி: சாலைமறியலில் ஈடுபட்ட 53 பேர் மீது வழக்கு


வாழப்பாடி அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பலி: சாலைமறியலில் ஈடுபட்ட 53 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 19 Feb 2019 3:45 AM IST (Updated: 19 Feb 2019 1:20 AM IST)
t-max-icont-min-icon

வாழப்பாடி அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பலியானதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 53 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வாழப்பாடி, 

விழுப்புரம் மாவட்டம் காவேரி நகர் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் மகன் மணிகண்டன் (வயது 21). இவர் கோவையில் ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். மணிகண்டன் நேற்று முன்தினம் விழுப்புரத்தில் இருந்து கோவைக்கு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். வாழப்பாடி அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றபோது கியாஸ் லாரி மோதிய விபத்தில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே மணிகண்டன் இறந்தார்.

இதனால் இந்த பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர். தொடர்ந்து வாரந்தோறும் இந்த பகுதியில் விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது, மேம்பாலமோ அல்லது சர்வீஸ் ரோடோ அமைத்து தரவில்லை என்று கூறியும், இதை கண்டித்தும் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒருமணி நேரம் இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வாழப்பாடி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில், மணிகண்டன் உடலை எடுக்க விடாமல் சாலைமறியலில் ஈடுபட்டதோடு, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கூறி மேட்டுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பெரியசாமி கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த முனியப்பன் (35), மணி (34), கள்ளக்குறிச்சியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (52) உள்பட 53 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story