புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கார்டுகள் புதுப்பிக்கும் பணி அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்


புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கார்டுகள் புதுப்பிக்கும் பணி அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 18 Feb 2019 11:15 PM GMT (Updated: 18 Feb 2019 8:49 PM GMT)

புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கார்டுகள் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் புதிய பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தின் விரிவாக்க பணிகள் இயக்குதல் மற்றும் பராமரித்தல் இடைவெளி திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில் புதிய பஸ் நிலைய விரிவாக்க நுழைவு வாயில், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம், பஸ் நிலைய சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டு விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய பஸ் நிலைத்தை திறந்து வைத்தனர். தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் திருச்சி, மதுரை, அதிராம்பட்டினம், திருவெற்றியூர், ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வகையில் 8 புதிய அதிநவீன அரசு பஸ்களை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:- இந்தியாவிலேயே தமிழக மருத்துவ காப்பீட்டு திட்டம் முன்னணி மருத்துவ காப்பீட்டு திட்டமாக திகழ்கிறது. தமிழகத்தின் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை இந்தியாவின் பிறமாநிலங்களும் பின்பற்றி வருகிறது. மத்திய அரசின் ஆயுஷ் காப்பீட்டு திட்டத்தில் இணைந்து தமிழக அரசு பொதுமக்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி கிடைப்பதை உறுதி செய்து உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 77 லட்சம் பேருக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. இந்த திட்டம் மத்திய, மாநில அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் விடுபட்ட 80 லட்சம் பேருக்கு மாநில அரசு தனது சொந்த நிதியின் கீழ் நிதியுதவி கிடைக்க வழிவகை செய்து உள்ளது. மேலும் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கார்டுகள் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான திட்டங்களால் புதுக்கோட்டை மாவட்டம் வளர்ந்த நகரங்களுக்கு இணையாக திகழ்கிறது என்றார். விழாவில் நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன், போக்குவரத்து கழக பொது மேலாளர் ஆறுமுகம் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story