வரத்து இல்லாதபோதும் கருப்பு திராட்சை விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை


வரத்து இல்லாதபோதும் கருப்பு திராட்சை விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 19 Feb 2019 4:15 AM IST (Updated: 19 Feb 2019 2:46 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் வரத்து இல்லாத காலத்தில் கருப்பு திராட்சை விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

உத்தமபாளையம்,

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல், வாழை, தென்னை விவசாயத்திற்கு அடுத்தபடியாக கருப்பு பன்னீர் திராட்சை விவசாயம் நடைபெறுகிறது. காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, ராயப்பன்பட்டி, அணைப்பட்டி, ஆனைமலையன்பட்டி,கூடலூர், க.புதுப்பட்டி, உத்தமபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான அளவில் கருப்பு பன்னீர் திராட்சை விவசாயம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்திலே ஆண்டுதோறும் திராட்சை பழம் கிடைக்கும் இடமாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விளங்குகிறது. இங்கு விளையும் கருப்பு பன்னீர் திராட்சை இயற்கையிலே மருத்துவ குணம் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் இங்கு விளையும் கருப்பு பன்னீர் திராட்சைக்கு கேரளாவில் எப்பொழுதும் கடும் கிராக்கி ஏற்படும்.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விளையும் கருப்பு பன்னீர் திராட்சையை மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட பெரும் நகரங்களுக்கு தரம் பிரித்து அனுப்புகின்றனர். இந்த பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் திராட்சை கொடியில் பூக்கள் மற்றும் பிஞ்சுகள் உதிர்ந்து விட்டது. இதன் காரணமாக திராட்சை பழம் வரத்து குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையிலும் திராட்சை விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது மழையின்றி கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் கருப்பு பன்னீர் திராட்சை விளைச்சல் குறைந்துவிட்டது. குறிப்பாக ஒரு தோட்டத்தில் 2 ஆயிரம் கிலோ திராட்சை விளையும் என்றால், தற்போது 1,000 கிலோதான் விளைச்சல் அடைந்துள்ளது. அதே நேரத்தில் திராட்சைக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் ஒரு கிலோ கருப்பு பன்னீர் திராட்சை ரூ.30 முதல் ரூ.35 வரைதான் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு கோடைகாலம் தொடங்கும் முன்பே கருப்பு பன்னீர் திராட்சை ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது என்றனர். இதுகுறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, தற்போது மராட்டிய மாநிலத்தில் இருந்து அதிக அளவில் விதையில்லா கருப்பு திராட்சை விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் இந்த பகுதி பன்னீர் கருப்பு திராட்சைக்கு கூடுதல் விலை கிடைக்கவில்லை என்றனர்.

Next Story