சிக்கமகளூரு அருகே 80 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது; 2 தம்பதிகள் உடல்நசுங்கி சாவு


சிக்கமகளூரு அருகே 80 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது; 2 தம்பதிகள் உடல்நசுங்கி சாவு
x
தினத்தந்தி 19 Feb 2019 2:55 AM IST (Updated: 19 Feb 2019 2:55 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூரு அருகே, 80 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 2 தம்பதிகள் உடல்நசுங்கி இறந்தனர். இவர்கள் தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

சிக்கமகளூரு,

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியாவை சேர்ந்தவர் விஸ்வநாத்(வயது 55). இவரது மனைவி புஷ்பாவதி(48). அதேப்பகுதியை சேர்ந்தவர் ராகுல்ராய்(58), அவரது மனைவி மமதா(51). இவர்கள் 4 பேரும் நேற்று காலை சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கலசாவில் நடந்த யக்‌ஷகானா நடன நிகழ்ச்சியை காண ஒரு காரில் வந்து இருந்தனர்.

நடன நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று மதியம் சுள்ளியாவுக்கு அவர்கள் காரில் சென்று கொண்டு இருந்தனர். காரை விஸ்வநாத் ஓட்டினார். கலசா அருகே இரேபையலு பகுதியில் சென்ற போது, விஸ்வநாத்தின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கார் முற்றிலும் உருக்குலைந்தது.

தம்பதிகள் சாவு

இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக கலசா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது காரின் இடிபாடுகளில் சிக்கி விஸ்வநாத், புஷ்பாவதி, ராகுல்ராய், மமதா ஆகிய 4 பேரும் இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து கலசா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 2 தம்பதிகள் இறந்த சம்பவம் இரேபையலு பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story