சீனா மாதிரியில் கொப்பல், பல்லாரியில் தொழிற்பேட்டைகள் முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்


சீனா மாதிரியில் கொப்பல், பல்லாரியில் தொழிற்பேட்டைகள் முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 19 Feb 2019 3:01 AM IST (Updated: 19 Feb 2019 3:01 AM IST)
t-max-icont-min-icon

சீனா மாதிரியில் கொப்பல், பல்லாரியில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்பேட்டைகளை முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்.

பெங்களூரு,

கர்நாடக அரசின் தொழில்துறை சார்பில் சீனா நாட்டு மாதிரியில் கொப்பலில் பொம்மைகள் தயாரிப்பு மற்றும் பல்லாரியில் ஜவுளி உற்பத்தி தொழில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்கள் திறப்பு விழா பெங்களூருவில் வைத்து காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு, அந்த தொழில் மையங்களை திறந்து வைத்து பேசியதாவது:-

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கர்நாடகம் முதன்மையான இடத்தில் உள்ளது. கர்நாடகத்தின் பொருளாதாரம் 10 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. தேசிய சராசரியை விட இது அதிகம் ஆகும்.

தொழிற்பேட்டைகளை தொடங்க...

திறன்மிகு தொழிலாளர்கள், சிறப்பு வாய்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள், புதுமையை கண்டுபிடித்தல் மற்றும் தொழில் தொடங்குவதற்கு உகந்த கொள்கையை வகுத்தல் போன்றவை காரணமாக தொழில் தொடங்க கர்நாடகம் சிறந்த இடமாக திகழ்கிறது.

தொழில் முதலீடுகளை ஈர்க்க ஊக்கம் அளிக்கவும், ஒத்துழைப்பு அளிக்கவும் மாநில அரசு தயாராக உள்ளது. உலக தரத்தில் தொழிற்பேட்டைகளை தொடங்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொப்பல் மற்றும் பல்லாரியில் இந்த தொழில் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

9 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு

பெண்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துதல், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தல் போன்ற பணிகளுக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கர்நாடகத்தில் 7,940 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெங்களூருவில் 400 ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையங்கள் உள்ளன.

பல்லாரி, மைசூரு, சித்ரதுர்கா, கலபுரகி ஆகிய இடங்களில் மாநில அளவிலான தொழிற்பேட்டைகளை அமைக்க தலா ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் 9 மாவட்டங்களில் அந்தந்த பகுதியில் உள்ள சூழலுக்கு ஏற்ப தொழிற்பேட்டைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாவட்டங்களில் தலா 1 லட்சம் பேர் என மொத்தம் 9 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

ரூ.1 லட்சம் கோடி முதலீடு

இதைத்தொடர்ந்து துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பேசியதாவது:-

கர்நாடகத்தில் 9 இடங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.1 லட்சம் கோடிக்கு முதலீடு கிடைக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி வேலை வாய்ப்பு உருவாக்குதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துதல் போன்றவற்றுக்கு இந்த அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

பெங்களூருவில் புதிதாக 8,000 தொழில்கள் தொடங்கப்படுகின்றன. அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. கர்நாடகத்தில் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழல் உள்ளது.

இவ்வாறு பரமேஸ்வர் பேசினார்.

இந்த விழாவில் தொழில்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story