வாரிசு வேலை, பட்டா கேட்டு அடுத்தடுத்து தர்ணா போராட்டம்


வாரிசு வேலை, பட்டா கேட்டு அடுத்தடுத்து தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 18 Feb 2019 10:45 PM GMT (Updated: 18 Feb 2019 9:35 PM GMT)

வாரிசு வேலை, பட்டா கேட்டு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து தர்ணா போராட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்,

நிலக்கோட்டை அருகேயுள்ள குல்லக்குண்டுவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 39). கூலித்தொழிலாளி. இவர் தனது மனைவி காந்தியம்மாள், மகள் நாகலட்சுமி, தாயார் அக்குமாரி ஆகியோருடன் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கூறுகையில், எனது தந்தை கதிரி கால்நடை துறையில் பணியாற்றினார். கடந்த 2008-ம் ஆண்டு பணியில் இருக்கும் போதே அவர் இறந்தார். எனவே, கருணை அடிப்படையில் எனக்கு வாரிசு வேலை கேட்டு 11 ஆண்டுகளாக போராடுகிறேன். இதுவரை வேலை கிடைக்கவில்லை. இதனால் வேதனையில் தர்ணாவில் ஈடுபட்டேன், என்றார். இதையடுத்து போலீசார் சமரசம் செய்து, அவரை மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்.

அதேபோல் வேடசந்தூர் தாலுகா கோவிலூரை அடுத்த நவக்குளத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல். இவரும், தனது மனைவி ரதிதேவி, மகன் அஜித், மகள் மித்ரா ஆகியோருடன் தர்ணாவில் ஈடுபட்டார். இதுபற்றி சக்திவேல் கூறுகையில், நாங்கள் 3 தலைமுறைகளாக நவக்குளத்தில் வசிக்கிறோம். எங்களுக்கு பட்டா கேட்டு கிராம நிர்வாக அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தோம். இதுவரை பட்டா கிடைக்கவில்லை. இதனால் தர்ணாவில் ஈடுபட்டதாக, தெரிவித்தார். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க அவரை போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் தாண்டிக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கணேஷ்பாபு முகத்தில் துணியை கட்டி தர்ணாவில் ஈடுபட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தாண்டிக்குடியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்டன. பண்ணைக்காட்டில் ஜீப்புகளில் அதிகமாக ஆட்களை ஏற்றி செல்கின்றனர். இதை தடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக கடந்த 2 ஆண்டுகளாக 210 மனுக்கள் கொடுத்தேன். இதுவரை எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டதாக கூறினார்.

கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து 3 தர்ணா போராட்டங்கள் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story