அலுவலகம், சேவை மையம் மூடப்பட்டது: பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கினர்


அலுவலகம், சேவை மையம் மூடப்பட்டது: பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கினர்
x
தினத்தந்தி 19 Feb 2019 4:30 AM IST (Updated: 19 Feb 2019 3:18 AM IST)
t-max-icont-min-icon

தொலை தொடர்பு அலுவலகம், சேவை மையத்தை மூடிவிட்டு பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

திருச்சி,

15 சதவீத ஊதிய நிர்ணய பலனுடன் 3–வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். பி.எஸ்.என்.எல்.–க்கு 4ஜி அலைக்கற்றை சேவையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். 1.1.2017 முதல் ஓய்வூதியதாரர்களுக்கு பென்‌ஷன் மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். 2–வது ஊதிய மாற்றுக்குழுவின் விடுபட்ட பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்.

மத்திய அமைச்சரவை எடுத்த முடிவின்படி, பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு அதன் சொத்துகளை மாற்றி கொடுக்க வேண்டும். பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரங்களை பராமரிக்க முன்மொழியப்பட்டுள்ள ‘அவுட் சோர்ஸிங்’ முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் சங்க கூட்டமைப்பினர் 3 நாள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர். அதன்படி, நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே ஊர்வலம், ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை திருச்சி ஒத்தக்கடையில் உள்ள பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகம் அருகே பி.எஸ்.என்.எல். அகில இந்திய அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில் அதிகாரிகள், ஊழியர்கள் போராட்டம் நடத்த ஒன்று கூடினர். அலுவலகத்திற்கு உள்ளே யாரும் செல்லாத வகையில் மெயின் கேட் பூட்டப்பட்டது. அத்துடன் வாடிக்கையாளர் சேவை மையம் மூடப்பட்டது.

பின்னர் மூடப்பட்ட பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. பி.எஸ்.என்.எல். அகில இந்திய அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்க கூட்டமைப்பு தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் அஸ்லம்பாஷா, சஞ்சார் நிகாம் அதிகாரிகள் சங்க மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், அகில இந்திய பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்க மாவட்ட செயலாளர் சசிக்குமார், தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் சுப்பிரமணியன், அகில இந்திய அதிகாரிகள் சங்க மாநில துணை செயலாளர் காமராஜ், எஸ்.சி–எஸ்.டி. ஊழியர் சங்க மாநில செயலாளர் குணசேகரன், தேசிய தொலை தொடர்பு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலை நிறுத்த போராட்டம் குறித்து அகில இந்திய அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்க கூட்டமைப்பு தலைவர் பழனியப்பன் கூறியதாவது:–

வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பெரும்பாலான பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள் மூடப்பட்டன. மேலும் தொலை தொடர்பு எக்சேஞ்ச் அலுவலகங்களும், வாடிக்கையாளர் சேவை மையமும் மூடப்பட்டது. பி.எஸ்.என்.எல். ஒருங்கிணைந்த வருவாய் மாவட்டமான திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் 1,600 அதிகாரிகள், ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிட்டத்தட்ட 92 சதவீதம் பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலை நிறுத்த போராட்டம் காரணமாக தரைவழி தொலைத்தொடர்பு சேவை முழுமையாக பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், திடீரென பழுதானால் சீரமைக்க பணியாளர்கள் யாரும் இல்லை. குறிப்பாக வங்கிகள், ரெயில்வே துறை ஆகியவற்றில் பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட், தரைவழி சேவைகள்தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு பழுதானால் சீரமைக்க ஆட்கள் செல்ல மாட்டார்கள். அதுபோல தொடர் பராமரிப்பில் உள்ள மொபைல் கோபுரங்களில் பாதிப்பு ஏற்பட்டாலும் செல்போன் சேவை பாதிப்பு ஏற்படும். மேலும் இணையதள சேவையும் பாதிக்கப்படும். எங்களது வேலை நிறுத்த போராட்டம் நாளை(புதன்கிழமை) வரை தொடர்கிறது. எனவே, அரசு கோரிக்கைகளை தீர்க்க முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story