திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி நாள் விழா: புத்தகங்களை படிப்பதின் மூலம் எண்ணங்களை வளப்படுத்தலாம்


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி நாள் விழா: புத்தகங்களை படிப்பதின் மூலம் எண்ணங்களை வளப்படுத்தலாம்
x
தினத்தந்தி 18 Feb 2019 10:30 PM GMT (Updated: 18 Feb 2019 10:08 PM GMT)

புத்தகங்களை படிப்பதின் மூலம் எண்ணங்களை வளப்படுத்தலாம் என்று புதுச்சேரி அரசின் கூடுதல் செயலாளர் சுந்தரேசன் தெரிவித்தார்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 54-வது கல்லூரி நாள் விழா நேற்று மாலையில் நடந்தது. கல்லூரி செயலாளர் சுப்பிரமணியம் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் மகேந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார்.

புதுச்சேரி அரசின் கூடுதல் செயலாளரும், துணைநிலை ஆளுனரின் கூடுதல் செயலாளருமான சுந்தரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதி மக்கள் உயர்கல்வி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் இங்கு கல்லூரியை தொடங்கினார். அவரது வழியில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் இங்கு பல்வேறு கல்லூரிகளை தொடங்கி, மாணவர்களுக்கு அளப்பரிய சேவையாற்றினார்.

இந்த கல்லூரிகளின் மூலம் எண்ணற்ற மாணவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர். நானும் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். நான் பள்ளிக்கூடத்தில் சுமாராக படித்தாலும், எனக்கு கல்வியில் ஆர்வமூட்டி உயர்ந்த நிலையை அடைய வைத்த ஆசிரியர்களுக்கும், பேராசிரியர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இங்கு கல்லூரியில் நன்றாக படிக்கும் மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதற்கு பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஏற்பாடு செய்தார். அதனால்தான் என்னைப் போன்றவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற முடிந்தது. இந்த தருணத்தில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த கல்லூரியில் பயின்ற மச்சேந்திரன், விஜயகுமார் பொன்ராஜ் ஆகியோர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகவும், மகாலிங்கம் ஐ.ஆர்.எஸ். அதிகாரியாகவும் திறம்பட பணியாற்றினர்.

நாம் ஒன்றை செயல்படுத்த தீர்மானிக்கும்போது, அதன் மீது ஆர்வத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். பின்னர் அதனை அடைவதற்கான வழிகள் குறித்து அமைதியுடன் சிந்தித்து செயல்படுத்த வேண்டும். நல்ல புத்தகங்களை படிப்பதின் மூலம் எண்ணங்களை வளப்படுத்தலாம். நல்ல எண்ணங்களை செயல்படுத்துவதின் மூலம் வாழ்வின் உயர்ந்த நிலையை அடையலாம். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் கல்லூரி ஆண்டு விழா மலரை கல்லூரி செயலாளர் சுப்பிரமணியம் வெளியிட்டார். அதனை புதுச்சேரி அரசின் கூடுதல் செயலாளரும், துணைநிலை ஆளுனரின் கூடுதல் செயலாளருமான சுந்தரேசன் பெற்று கொண்டார். பின்னர் அவர் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.

விழாவில் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் பெவின்சன் பேரின்பராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய செசிலி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி, சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் முத்தையாராஜ் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. வணிக நிர்வாகவியல் துறை தலைவர் நாராயணராஜன் நன்றி கூறினார்.

Next Story