பரமக்குடியில் பள்ளி மாணவர்களை குறிவைத்து போதை பொருட்கள் விற்பனை


பரமக்குடியில் பள்ளி மாணவர்களை குறிவைத்து போதை பொருட்கள் விற்பனை
x
தினத்தந்தி 19 Feb 2019 4:00 AM IST (Updated: 19 Feb 2019 3:47 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடியில் பள்ளி மாணவர்களை குறி வைத்து போதை பொருட்கள் விற்பனை நடைபெறுவதால் பெற்றோர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி வளர்ந்து வரும் பகுதியாகும். இங்கு அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், நெசவாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் வசித்து வருகின்றனர். மேலும் இங்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராம மக்களும் தங்களின் அன்றாட தேவைக்காக வந்து செல்வது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இவற்றுக்கு ஏற்றாற்போல் இந்த பகுதியில் போதைப்பொருட்களின் விற்பனையும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், கூலி தொழிலாளர்கள் ஆகியோரை குறிவைத்து கஞ்சா, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் விற்பனை செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் விளையாட்டுப்போக்கில் இவற்றை பயன்படுத்தும் மாணவர்களும், இளைஞர்களும் நாளடைவில் அதற்கு அடிமையாகி தினமும் இவற்றை வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு ஆளாகின்றனர். இதை பயன்படுத்துபவர்கள் அந்த போதை சுகத்தை அனுபவித்து மற்ற நண்பர்களுக்கும் அதனை பழக்கி விடுகின்றனர். போதை தலைக்கேறியதும் என்ன செய்கிறோம் என்பது கூட தெரியாமல் பெண்களை கேலி செய்தல், பொதுமக்களுக்கு இடையூறாக தகராறு செய்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். எதிர்கால தூண்களாக திகழக்கூடிய மாணவர்களும், இளைஞர் சமுதாயமும் போதைக்கு அடிமையாகி சீரழிந்து வருவது வேதனை உள்ளது.

இதனையறிந்த சில பள்ளிகளில் அதன் நிர்வாகத்தினர் அதிரடி சோதனை நடத்தியபோது மாணவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கைப்பற்றி உள்ளனர். பின்பு இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து பிள்ளைகளை கண்காணிக்கும்படி எச்சரித்துள்ளனர். இதனால் அதிர்ச்சிஅடைந்துள்ள பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி கலங்கிப்போய் உள்ளனர். தங்கள் குழந்தைகள் நன்றாக படித்து வாழ்க்கையில் உயரவேண்டும் என்ற கனவுகளோடு வாழ்ந்து வரும் பெற்றோர்களுக்கு சில சமூக விரோதிகளின் சுயநலத்தால் பிள்ளைகளின் நிலை கண்டு அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.

பரமக்குடி பகுதியில் பல இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதும், போலீசார் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனாலும் அவற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இளைய சமுதாயத்தை பாதுகாக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு. எனவே பரமக்குடி பகுதியில் போதைப்பொருட்களையும், அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களையும் விற்பனை செய்வதை முழுமையாக தடுக்கவும், அதில் தொடர்புடையவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும் மாவட்ட போலீஸ் நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story